தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “சட்டமன்ற தேர்தலில் தேவைப்பட்டால் நானும் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து பிரச்சாரம் மேற்கொள்வோம். எடப்பாடிக்கே நான் பிரச்சாரத்துக்கு செல்வேன். அண்ணன் தம்பிகளாக எங்களின் பயணம் தொடரும். என்னுடைய நண்பர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கிறேன். அவரை வளர்த்துவிட்ட அமைப்பிற்கு அவர் நன்றிகடன் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சி அமைய அவர் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்.
நான் தேர்தலில் போட்டியிடவில்லை. என்னுடன் இருப்பவர்கள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. வாய்ப்பு இருந்தால் இரண்டு மூன்று பேரை அமைச்சராக விரும்புகிறேன். அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்தாலும் இபிஎஸ் கூட்டணி ஆட்சிகளுக்கு பங்கு கொடுக்கலாம்.” என்றார்.
டிடிவி தினகரனுக்கு என்.டி.ஏ. கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அவர் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.