“தருமபுரியில் நாம் தமிழர் கட்சி கூண்டோடு கலைப்பு என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இதில் உடன்பாடு இல்லை, ஏனெனில் தருமபுரியில் நாம் தமிழர் கட்சிக்கு கூண்டே இல்லை.” என்று கட்சியிலிருந்து விலகிய அரூர் சட்டமன்ற தொகுதி தலைவர் இளையராஜா கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடவடிக்கைகளைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.
இந்நிலையில், தர்மபுரி வெண்ணாம்பட்டியில், நாதகவில் இருந்து விலகிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் இளையராஜா கூறியதாவது:
”நாம் தமிழர் கட்சியில் அரூர் சட்டமன்ற தொகுதி தலைவராக 7 ஆண்டுகள் பணியாற்றி வந்தேன். தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். இதற்கு காரணம், சீமான் கொள்கை கோட்பாட்டிலிருந்து விலகி ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கின்ற தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவதும், சில சாதிகளை தரம் தாழ்த்தி பேசுவதும், மாற்று மொழி பேசுபவர்களை இழிவுப்படுத்தி பேசுவதும் கட்சியின் கட்டமைப்பை சிதைக்கிறது. இதனால்தான் கட்சியிலிருந்து விலகுகிறோம். விஜய் கட்சியில் சேர்வதற்காக கட்சியில் இணையவில்லை.
தருமபுரியில் நாம் தமிழர் கட்சி கூண்டோடு கலைப்பு என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இதில் உடன்பாடு இல்லை, ஏனெனில் தருமபுரியில் நாம் தமிழர் கட்சிக்கு கூண்டே இல்லை.
என்னுடன் அரூர் சட்டமன்றத் தொகுதி பொருளாளர் சுரேஷ், அரூர் ஒன்றிய பொறுப்பாளர் சிவா, அரூர் தொகுதி துணை செயலாளர் வேடியப்பன், ஒன்றிய பொருளாளர் நிவாஸ் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து விலகுகின்றன” என்றார்.