தமிழ் நாடு

கோயம்பேடா, கிளாம்பாக்கமா - குழப்பத்தில் பயணிகள்; ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்!

Staff Writer

கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் கோயம்பேட்டிலிருந்து புறநகர் பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்வகையில், கிளாம்பாக்கத்தில் தென்மாவட்டப் பேருந்துகளுக்கான பேருந்துநிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

கிளாம்பாக்கத்தில் இருந்து அரசுப் பேருந்துகளை இயக்கும்போது, ஆம்னி பேருந்துகளையும் அங்கிருந்து இயக்குவது தான் சரியாக இருக்கும்; அதனால் (இன்று) ஜனவரி -24-க்குப் பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கா் தெரிவித்திருந்தார்.

ஆனால், கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்றும் வழக்கம்போல கோயம்பேட்டிலிருந்துதான் இயக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதனிடையே, சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ அனுமதிக்கப்படமாட்டாது; கிளாம்பாக்கத்திலிருந்தே பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று மாலைமுதல் ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இன்று இரவு 7 மணிக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கக் கூடாது என ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதனால், ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகள், எங்கு சென்று ஆம்னி பேருந்து ஏறுவது என்ற குழப்பமும் அவதியும் அடைந்துள்ளனர்.