தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படவில்லை என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எஸ்ஐஆர் பணிக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 97,37,832 பேர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 14,25,018 பேர் நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சேலம் எடப்பாடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் இது தொடர்பான கேள்வி செய்தியாளர்கள் முன்வைத்தர். அதற்கு பதிலளித்த அவர், “எஸ்.ஐ.ஆரில் ஒரு கோடி வாக்காளர்களை நீக்கப்படவில்லை. ஊடகங்கள் தவறான தகவலைப் பரப்பக்கூடாது. எஸ்.ஐ.ஆர். முழுமையாக நிறைவேற்றப்பட்டால் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்.
21 ஆண்டுகளாக எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தேர்தல் வந்தால் இறந்தவர்கள் எல்லாம் உயிர்பெற்று வந்து திமுகவுக்கு வாக்களிப்பார்கள். அதனால் தான் திமுகவினர் பயப்படுகின்றனர். இதுவரை போலி வாக்காளர்களை வைத்து வெற்றி பெற்று வந்தோம், எஸ்.ஐ.ஆர். முழுமையாக நிறைவேற்றப்பட்டால் அந்த வாக்குகள் இல்லாமல் போய்விடும் என பதறுகிறார்கள்.
ஒரு மாத காலம் நேரம் கொடுத்திருக்கிறார்கள், தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் உரியப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதற்குரிய அலுவலர்களிடம் கொடுக்கலாம்.
எஸ்.ஐ.ஆரில் என்ன குறைபாடு உள்ளது. எதிர்க்க வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார். எஸ்.ஐ.ஆர். எல்லா கட்சிக்கும் பொதுவானது. உண்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.” என்றார்.
மேலும் ”இந்த ஆண்டு திமுகவுக்கு இறுதி ஆண்டு. இதற்கு மேல் ஆட்சிக்கு வர மாட்டார்கள். இந்த ஆண்டாவது மக்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக பொங்கல் தொகுப்பாக ஐந்தாயிரம் தர வேண்டும். ரயில்வே கட்டண உயர்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.” என்றார்.