எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

“31 தொகுதிகளில் 33,000 வாக்குகள்தான்” - கிருஷ்ணசாமி விமர்சனத்துக்கு இ.பி.எஸ். பதில்!

Staff Writer

31 தொகுதிகளில் போட்டியிட்டு மொத்தம் 33 ஆயிரம் ஓட்டு வாங்கிய கிருஷ்ணசாமிக்கு எத்தனை சீட்டுகள் கொடுக்க முடியும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், புதிய தமிழகம் கட்சியுடன் நாங்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வேறு ஒருவர் மூலமாக முதலில் 10 தொகுதிகளை கேட்டனர். முடியாது என்றோம். பின்னர் 5 தொகுதிகளை குறைத்துக் கொண்டு 5 தொகுதிகளை கேட்டனர். அதற்கும் தர முடியாது என நாங்கள் சொல்லிவிட்டோம்.

கடந்த 2021 ஆம் ஆண்டு எங்களுடன் அவர் கூட்டணி வைக்கவில்லை. இதை சொல்லக் கூடாது, ஆனால் அவர் சொல்ல வைத்துவிட்டார். ஒவ்வொரு கட்சியும் கூட்டணியில் சேரும் போது அந்த கட்சி பெற்ற வாக்குகளின் அடிப்படையில்தான் சீட் கொடுப்பது வழக்கம். 31 தொகுதிகளில் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகள் பெற்ற கிருஷ்ணசாமிக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்க முடியும்?

அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் எல்லாருமே இப்படித்தான் விதிகளை கடைபிடித்து வருகிறார்கள். எங்களுடன் கிருஷ்ணசாமி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவருக்குத் தேவையானவரை அனுப்பியிருந்தார். நாங்கள் இயலாது என சொல்லிவிட்டோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம் பெறும் என நினைத்திருந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தனித்து போட்டி என அறிவித்தார். மேலும் தங்கள் கட்சியை அதிமுக புறக்கணித்துவிட்டதாகவும் மதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.