அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுவதாக இருந்த நிலையில், இந்த கூட்டம் டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்பது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் கோரிக்கை. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இணைந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர். இதன் அரசியல் ஆலோசகராக மூத்த அதிமுக தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்து வருகிறார்.
அண்மையில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற இதன் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவில் தங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்; இல்லை எனில் டிசம்பர் 15ஆம் தேதி மீண்டும் கூடி ஆலோசனை நடத்தி முக்கிய முடிவை அறிவிப்போம் என கூறியிருந்தார் ஓபிஎஸ்.
இதனிடையே சென்னையை அடுத்த வானகரத்தில் டிசம்பர் 10ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில், தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே, கூட்டணியில் இதர கட்சிகளை சேர்க்கும் முடிவை எடுப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பின்னணியில் ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.