நீரில் குறையும் ஆக்சிஜன் அளவு 
தமிழ் நாடு

அடிக்கடி செத்து மிதக்கும் மீன்கள்... அழிவின் விளிம்பில் தென்பெண்ணை ஆறு!

Staff Writer

தென்பெண்ணை ஆற்று நீரில் ஆக்சிஜன் அளவு 90 மடங்கு குறைவாக உள்ளதால், தென்பெண்ணை ஆற்றைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

"கர்நாடகத்தில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகளால், ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரில் ஆக்சிஜன் வாயுவின் அளவு இயல்பான அளவைவிட 90 மடங்கு குறைவாக இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

தென்பெண்ணை ஆற்றைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் பல முறை ஆணையிட்டும்கூட, அதன் மீது கர்நாடக அரசும், தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், ஆற்று நீரில் இயல்பாக லிட்டருக்கு 7 மில்லி கிராம் முதல் 9 கிராம் வரை ஆக்சிஜன் கலந்திருக்க வேண்டும் என்றும், ஆனால், தென்பெண்ணை ஆற்று நீரில் 0.1 மில்லிகிராம் அளவுக்கு மட்டுமே ஆக்சிஜன் கலந்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

இது இயல்பான அளவைவிட 90 மடங்கு குறைவாகும். அதேபோல், பாஸ்பரஸ், நைட்ரேட்ஸ் போன்ற நச்சு திடப்பொருள்களின் அளவும் இரு மடங்கிற்கும் கூடுதலாக கலந்திருக்கிறது.

இயல்பாக ஆற்று நீரில் ஆக்சிஜன் அளவு லிட்டருக்கு 4 மில்லி கிராம் அளவுக்கு குறைந்ததால், அதில் மீன்கள் உட்பட்ட எந்த நீர்வாழ் உயிரினங்களும் வாழ முடியாது.

தென்பெண்ணை ஆற்றில் அடிக்கடி மீன்கள் செத்து மிதந்ததற்கு இதுதான் காரணம் ஆகும். தென்பெண்ணை ஆறு கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

கர்நாடகத்தில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுகள் தினமும் 132.9 கோடி அளவுக்கு தென்பெண்ணை ஆற்றில் கலக்கவிடப்படுவதுதான் இந்த அவல நிலைக்குக் காரணம் ஆகும்.

கடந்த ஆண்டு கெலவரப்பள்ளி அணையில் உள்ள நீரில் கலந்துள்ள ஆக்சிஜனின் அளவு லிட்டருக்கு 1.3 மில்லி கிராம் என்ற அளவில் இருந்தது. அடுத்த ஓராண்டுக்குள் கெலவரப்பள்ளி அணையில் உள்ள நீரில் ஆக்சிஜன் அளவு 13 மடங்கு குறைந்திருப்பதிலிருந்தே தென்பெண்ணை ஆறு எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டு வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இது தொடர்பான வழக்கில் 2022 ஜூலை மாதம் 13ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கிய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலப்பதை முற்றிலுமாகத் தடுக்க கர்நாடக மாசுக்கட்டுப்பாடு வாரியமும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

ஆனால், அதன்பின் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதற்காக இரு மாநில அரசுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தென்பெண்ணை ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க பெங்களூரில் 10 புதிய சுத்திகரிப்பு நிலையங்களும், பிற பகுதிகளில் 12 புதிய சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட வேண்டும்.

மேகதாது அணை கட்டுவதற்காக ரூ.9000 கோடி செலவழிக்கத் தயாராக இருக்கும் கர்நாடக அரசு, தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலப்பதை ரூ.5000 கோடி செலவுசெய்யத் தயாராக இல்லை. இதற்குக் காரணம் இதனால் கர்நாடகத்திற்கு பாதிப்பு இல்லை என்பதுதான்.

கர்நாடகத்தின் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு ஓசூர் கெலவரப்பள்ளி அணை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம். கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக கடலூர் மாவட்டம் வரை பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

இதனால் 25 ஆயிரத்திற்கும் கூடுதலான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சுமார் 50 இலட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் தென்பெண்ணை ஆறு திகழ்கிறது. தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் திறந்து விடும் கழிவுகளால் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தென்பெண்ணை ஆற்றைக் காப்பாற்ற வேண்டும் என்றால், கர்நாடகத்தில் இருந்து கழிவுகள் கலக்கப்படுவதைத் தடுப்பதுதான் ஒரே வழியாகும். இது தொடர்பான தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணைகளை கர்நாடக அரசு செயல்படுத்தாத நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, கர்நாடக அரசிடம் இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும். கர்நாடக அரசுக்கு தொடர் நெருக்கடி கொடுத்து தொழிற்சாலைகளின் கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கவிடப்படுவதைத் தடுக்க வேண்டும்." என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram