தமிழ் நாடு

சேலம் விபத்து- அரசு பொறுப்பை உணர வேல்முருகன் வேண்டுகோள்!

Staff Writer

சேலம் பேருந்து விபத்தில் 
எட்டு பேர் உயிரிழந்ததில் சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது யார் என்று த.வா.க. தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.  

விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், ”இந்த துயரச்சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டுகிறோம். அவர்களுக்கு மிக உயர்ந்த தரத்தில் சிகிச்சை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். சிகிச்சை செலவுகள் முழுமையாக அரசால் ஏற்றுக்கொள்ளப்படுவது மனிதநேயக் கடமையாகும்.” என்றும் வலியுறுத்தியுள்ளார். 

”இந்நிகழ்வு ஒரு தனிப்பட்ட விபத்தாக மட்டும் கருதப்படக்கூடாது. பொதுப் போக்குவரத்து பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் மீண்டும் வெளிப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு, ஓட்டுநர்களின் பணிநிலைகள், சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகிய அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு உடனடி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்கள் உயிர் பாதுகாப்பு அனைத்து நிர்வாகத்திற்கும் முதன்மைப் பொறுப்பு என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.
மேலும், இந்த விபத்திற்கான முழுமையான விசாரணை நடைபெற்று உண்மையான காரணங்கள் வெளிக்கொணரப்பட்டு, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் மட்டுமின்றி, அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கான நிலையான ஆதரவையும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.” என்றும் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.