அரசுப் பேருந்துகள் 
தமிழ் நாடு

நாய்ஸ் டார்ச்சர் பார்ட்டிகளுக்கு வந்தது ஆப்பு... அரசுப் பேருந்துகளில் இனி சத்தம் கூடாது!

Staff Writer

அரசுப் பேருந்துகளில் இனி சத்தமாக ரீல்ஸ் பார்க்கவோ, ஸ்பீக்கர் ஒலியுடன் செல்போன் பயன்படுத்தவோ கூடாது என்று அரசு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள், போனில் சத்தமாக பேசிக்கொண்டு செல்வது உட்பட்ட அசெளகரியங்களை சக பயணிகளுக்கு ஏற்படுத்தக்கூடாது என்று போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.

போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல் ராஜ் இதுகுறித்து சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதில், அரசுப் பேருந்துகளில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரைப் பயன்படுத்தக் கூடாது; பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் போனில் சத்தமாகப் பேசக்கூடாது; இயர்போன் போன்றவற்றை பயன்படுத்தலாம். இது தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உட்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

" பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும்போது,

1. மோட்டார் வாகன ஒழுங்குமுறை விதியின்படி வாகனத்தில் உரத்த ஒலியில் இசை ஒலிக்கப்படாமல் இருப்பதை ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும்.

2. சக பயணிகளுக்கு இடையூறு அல்லது சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் முறைகேடாகக் கருதப்படும்.

பயணம் முழுதும் கைப்பேசியில் உரத்த குரலில் பேசிக்கொண்டே தொடர்ந்து பயணித்தல், கைபேசியில் ஸ்பீக்கர் பயன்படுத்துதல், இயர்போன் இல்லாமல் இசை கேட்பது, காணொலியில் படம் பாரத்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பயணிகளுக்கு இடையூறு இல்லாமலும், சக பயணிகளின் அமைதி நிலையைக் கெடுக்காமலும் பயணிக்க வேண்டும்.

இந்த நெறிமுறைகளை அனைத்து பேருந்துகளின் உட்புறத்தில் பயணிகளுக்குத் தெரியும்படி ஒட்டி, அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்." என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram