உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் 
தமிழ் நாடு

அரிசி விலை உயரவில்லை என்பதா? - அமைச்சருக்கு அன்புமணி கண்டனம்!

Staff Writer

அரிசி, பருப்பு விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிப்படைவதால், இதில் அலட்சியம் காட்டாமல் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

"தமிழ்நாட்டில் அரிசி விலை நாளுக்கு நாள் அதிகரித்து, அன்றாடப் பயன்பாட்டுக்கான அரிசியே கிலோ ரூ.77 என்ற உச்சத்தை அடைந்திருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் முதல் இப்போது வரையிலான 3 மாதங்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.27 வரையிலும், 26 கிலோ மூட்டை ரூ.700 வரையிலும் உயர்ந்திருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், அரிசி விலை உயரவே இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் கூறி வருவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதம் ரூ.1100 ஆக இருந்த 26 கிலோ எடை கொண்ட சாதாரண ரக புழுங்கல் அரிசி மூட்டை விலை இப்போது ரூ.1800 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல், பொன்னி புழுங்கல் அரிசி மூட்டை விலை ரூ.1400-லிருந்து ரூ.1900 ஆகவும், ஆந்திரா, கர்நாடகத்திலிருந்து வரும் சோனா மசூரி அரிசி மூட்டை விலை ரூ.1400-லிருந்து ரூ.2000 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

அதேபோல், விருதுநகர் மொத்த விற்பனை சந்தையில் துவரம் பருப்பு 100 கிலோ மூட்டை விலை ரூ.13,200 -லிருந்து ரூ.600 உயர்ந்து ரூ.13,800 ஆக அதிகரித்துள்ளது. நயம் உளுந்தம்பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.9,100 முதல் ரூ.9,200 வரை விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் மூட்டைக்கு ரூ.1,100 உயர்ந்து, ரூ.10,200 முதல் ரூ.10,400 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை விலையில் ஒரு கிலோ அரிசி ரூ.27 வரையிலும், துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.6, உளுத்தம்பருப்பு ரூ.11 வீதமும் உயர்ந்துள்ள நிலையில், அதனால் ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அரிசி விலையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. மாறாக, அரிசி உட்பட்ட 11 அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கண்காணித்து வருகிறோம்; அரிசி விலை உயரவே இல்லை; இது எதிர்க்கட்சிகளால் கட்டமைக்கப்படும் பொய்யான பிம்பம் தான் என்று உணவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

அரிசி விலை கிலோவுக்கு ரூ.27 வரை உயர்ந்திருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலையே உயரவில்லை என்று கூறுவது மிகவும் ஆபத்தானது. இத்தகைய அலட்சியப் போக்கை கைவிட்டு, அரிசி, பருப்பு உட்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram