எஸ்.ஐ.ஆர். 
தமிழ் நாடு

வாக்குத் திருட்டு... தி.மு.க. மாறிமாறிப் பேசுகிறது- மாணிக்கம் தாகூர்

Staff Writer

தி.மு.க. தோல்விக்கு ஊழல், சட்டம் ஒழுங்கு சீரழிவு, பெண்களைப் பற்றி தவறாகப் பேசிய பேச்சுகள், கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதம்தான் காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

"கடந்த 21.2.2026 அன்று மதுரையில் நடைபெற்ற தி.மு.க. தென் மண்டல வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்களுக்கான ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி மாநாட்டில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மூலம் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் யாருடைய வாக்குகளையும் நீக்க விடாமல், பம்பரமாக உழைத்த இயக்கம் தி.மு.க.” என்றார்.

ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் மக்கள் தி.மு.க.வை முற்றிலுமாகப் புறக்கணித்துத் தோல்வியைத் தந்தவுடன், இப்போது எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதே தங்களது தோல்விக்குக் காரணம் என்கின்றனர்.

தேர்தலுக்கு முன்னால் "வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைச் சிறப்பாக முடித்துவிட்டோம், எந்தப் பிரச்னையும் இல்லை" என்று கூறிவிட்டு, தேர்தல் முடிந்து மக்கள் தீர்ப்பு எதிராக வந்த பிறகு மட்டும் வாக்காளர் திருத்தப் பணி மீது பழியைப் போடுவது என்ன வகையான அரசியல்?

மேற்கு வங்கத்தில் அப்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி எஸ்.ஐ.ஆ.ரைச் செயல்படுத்த மறுத்தபோதிலும், ‘ஊடுருவல்காரர்கள்’ என்ற பெயரைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாகப் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதேபோல அசாமிலும் பீகாரிலும் முறைகேடுகள் நடைபெற்றன; மகாராஷ்டிரா, ஹரியானாவில் வேறு வகையான வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது!

ஆனால், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய இடங்களில் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக எந்தப் புகாரும் இல்லை. வரலாறு காணாத ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான தவறான பேச்சுகள், கூட்டணிக் கட்சிகளை அவமதித்து தான் திமுகவின் உண்மையான தோல்விக்குக் காரணம்!

இப்போதுகூட எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பதாக தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகிறார்களே தவிர, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.

தமிழ்நாட்டின் நலன், ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றில் தி.மு.க.வுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

மாறாக, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்." என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram