மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மரணம் அடைந்தார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
"சினிமா படங்களுக்கு டாப்-10 வரிசை போடுவது போல, த.வெ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு வரிசை போடும் அளவிற்கு நிலைமை சந்தி சிரிக்கிறது.
ஒருபுறம் செஞ்சிச் சிறுமியை இன்னும் “தாய்மாமா” அரசின் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை; மறுபுறம், மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை முதல் காஞ்சிபுரம் டாஸ்மாக் பணக் கொள்ளை வரை இன்னும் பல கொள்ளைக் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது த.வெ.க. அரசு.
இதே சினிமாவாக இருந்திருந்தால், குற்றவாளிகளை பாலத்தில் கட்டித் தொங்கவிட்டு மாஸ் பி.ஜி.எம். போட்டிருப்பார். கனவு உலகத்தைக் கண்டு நிஜமான நம்பி ஆட்சியைக் கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்த த.வெ.க. கட்சிக்கு வாக்களித்த மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
காவல் நிலையத்தில் ஒருவர் உயிரை மாய்த்துகொள்ளும் அளவிற்கு இந்த ஆட்சியின் காவல்துறை மெத்தனமாக இருந்திருக்கிறது என்பது வெட்கத்திற்குரியது.
நேற்றைய தினம் இதேபோல் பண்ருட்டி பகுதி காவல் நிலையத்தில் ஒரு பெண் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டது உட்பட்ட தொடர் செய்திகள் முதல்வர் காதுகளுக்கு எட்டுகிறதா?
“நீதியும் வரல. சாரியும் வரல.”
பொறுப்புக்கூறல் என்றால் என்னவென்றாவது முதலமைச்சர் விஜய்க்கு தெரியுமா?
காவல் நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.