பாலியல் வன்கொடுமை (மாதிரிப்படம்) 
தமிழ் நாடு

சென்னையில் 6 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரம்!

Staff Writer

சென்னை திருவொற்றியூரில் 6 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு அரசு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"சென்னை திருவொற்றியூர் பகுதியில் பெற்றோருடன் வாழ்ந்து வந்த 6 வயது வடமாநில சிறுமி அதே பகுதியில் வசித்து வந்த வட மாநில இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தெய்வமாகக் கொண்டாடப்பட வேண்டிய குழந்தையை சீரழித்த மனித மிருகங்களை அரசும், காவல்துறையும் தப்பவிடக் கூடாது.

திருவொற்றியூரில் சிறுமியின் பெற்றோர் மாலை நேரத்தில் பானி பூரி விற்க வெளியில் சென்றதைப் பயன்படுத்திக் கொண்டு அதே வீட்டின் மேல்தளத்தில் வசித்து வந்த வட மாநில இளைஞர்களான ராகுல், சித்தரஞ்சன், மனோஜ் ஆகியோர் இந்தக் கொடுமையை இழைத்ததாகக் கூறப்படுகிறது.

தமக்கு நேர்ந்த கொடுமையைக்கூட பெற்றோரிடம் சிறுமியால் கூற முடியாத நிலையில், அதிக ரத்தப் போக்கு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியை மருத்துவர் பரிசோதித்துதான் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சிறுமிக்கு உதவிய அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும், அப்பகுதி மக்களும் இணைந்து குற்றவாளிகளில் இருவரைப் பிடித்து, தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். தப்பி ஓடிய இன்னொரு குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவனையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை பெற்றுத் தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் எந்தப் பெண்ணுக்கும், எந்தக் குழந்தைக்கும் பாலியல் வன்கொடுமை இழைக்கப்படாமல் இருப்பதை தமிழக காவல்துறை உறுதி செய்ய வேண்டும்." என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram