ஆளுநர் ஆர்.என்.ரவி 
தமிழ் நாடு

தமிழகத்தில் பி.எச்.டி. படிப்பு தரமாக இல்லை! – ஆளுநர் ஆர்.என். ரவி

Staff Writer

தமிழகத்தில் ஆராய்ச்சி படிப்பின் தரம் திருப்தியாக இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு-2024 தரவரிசையில் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்குப் பாராட்டு விழாவும், தமிழ்நாட்டின் உயர் கல்வி சிறப்பு குறித்த கருத்தரங்கமும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

“நாட்டின் சிறந்த கல்லூரிகளில் முதல் 20 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த 28 கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெற்று வருவது பெருமைக்குரியது. இந்த நிகழ்ச்சி தற்போது 3ஆவது முறையாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம் மாநிலத்தில் இருக்கும் கல்லூரிகள் தனியாக செயல்படுவதை மாற்றி, மற்ற கல்லூரிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு ஊக்குவிப்பதாகும்.

தமிழகத்தில் ஆராய்ச்சி (பி.எச்.டி) படிப்புக்கான கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். பி.எச்.டி. முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், அதன் தரம் திருப்திகரமாக இல்லை. ஒருசில கல்வி நிறுவனங்களில் மட்டுமே பி.எச்.டி.க்கான கல்வி தரம் சிறப்பாக உள்ளது. நம் நாட்டின் அறிவுசார் சொத்துகளை உயர்த்துவதற்கு அதிக தரம் கொண்ட பி.எச்.டி. படிப்புகளைக் கொண்டுவர வேண்டும்.” என்றார்.

கடந்த நில நாள்களுக்கு முன்னர் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது என்று கூறியிருந்த நிலையில் தற்போது பி.எச்.டி படிப்புகள் தரமாக இல்லை என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram