அன்புமணி 
தமிழ் நாடு

பா.ம.க. நிர்வாகி சுட்டுக்கொலை!

Staff Writer

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஞானவேல் என்பவர் நாட்டுத் துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

அதில், “பூவரசன் என்பவர் சட்டவிரோதமாக மான் வேட்டையாடியதை ஞானவேல் தட்டிக் கேட்டதால் இருவருக்கும் இடையே முன்பகை நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த பூவரசன், நேற்று மாலை ஞானவேலுடன் மோதலில் ஈடுபட்டு சுட்டுக் கொன்றதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வில் ஞானவேலுவுடன் வந்த ரகு என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சோளிங்கர் நகரத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியும், வழக்கறிஞருமான சக்கரவர்த்தி என்பவர் கடந்த ஆண்டு ஜூன் 11&ஆம் தேதி பிரபு என்பவரால் இதேபோல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதன்பின் கொலையாளி பிரபுவை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது அவர்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவி வருவது குறித்து அப்போதே எச்சரித்தேன். ஆனால், இப்போதும் அதே நிலை தான் தொடர்கிறது.

துப்பாக்கிக் கலாச்சாரம் பெருகுவது மிகவும் ஆபத்தானது. தமிழகத்தின் சட்டம் & ஒழுங்கு நிலைமை மேலும் மோசமடைந்து விடாமல் தடுக்க தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை அடியோடு வேரறுக்க அதிரடியான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.” என்று அன்புமணி கூறியுள்ளார்.