” தமிழ்நாடு முதலிய மாநிலங்களின் வரிவிதிக்கும் உரிமையைப் பறிக்கும் வகையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் 9டி என்ற புதிய பிரிவை சேர்ப்பதற்கான சட்டத் திருத்த முன்வரைவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தக் கூடிய இச்சட்டத் திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாதது.” என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
” நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்த முன்வரைவின் மூலம் சேர்க்கப்படவுள்ள 9 டி பிரிவு மிகவும் ஆபத்தானது. அந்தப் பிரிவின்படி, கனிம வளங்கள் உரிமை மீது எந்த வரியையும், கூடுதல் வரியையும், தீர்வைகளையும் மாநில அரசுகள் தன்னிச்சையாக விதிக்க முடியாது. அதுமட்டுமின்றி, மாநில அரசுகளால் ஏற்கெனவே இது போன்ற வரிகள் விதிக்கப்பட்டு, அதை கனிமச் சுரங்க ஒப்பந்ததாரர்கள் செலுத்தாமல் இருந்தால், இந்தச் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வரும்போது, நிலுவையில் உள்ள வரித் தொகையை செலுத்தத் தேவையில்லை. கனிமங்கள், அவை கிடைக்கும் நிலங்கள் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்தாலும், மத்திய அரசால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் மட்டும்தான் வரி விதிக்க முடியும்.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத் திருத்த முன்வரைவு மாநில அரசின் வரி விதித்து, வருவாய் ஈட்டும் அதிகாரத்தைப் பறிக்கிறது. நிலங்கள், கனிமங்கள் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்தாலும்கூட, வரி விதிப்பை முறைப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதைப் பயன்படுத்தி கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு முயல்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
2025-26ஆம் ஆண்டில் கனிம வளங்கள் மீதான வரி, ராயல்டி உள்ளிட்ட அம்சங்கள் மூலம் தமிழ்நாடு அரசு ரூ.4100 கோடி வருவாய் ஈட்டியது. 2026-27ஆம் ஆண்டில் இந்த வருவாயை ரூ.11 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தமிழ்நாட்டின் கனிமவளங்கள் முறையாக கையாளப்பட்டால் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வரை வருவாய் ஈட்ட முடியும் என்பது பாமகவின் நிலைப்பாடு ஆகும். எந்தெந்த வகைகளில் எல்லாம் இந்த வருவாயை ஈட்ட முடியும்.
சரக்குகள் மற்றும் சேவை வரிவிதிப்புச் சட்டம் 2017ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த பிறகு மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரம் முற்றிலுமாகப் பறிக்கப்பட்டு விட்டது. மதிப்புக் கூட்டு வரி, மோட்டார் வாகன வரி, பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தீர்வை, கனிமங்கள் மீதான வரிகள் மூலமாகத்தான் மாநில அரசுகள் தங்களுக்கான வருவாயைத் திரட்ட வேண்டியுள்ளது. அதையும் பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றுவது மாநில அரசுகளின் வருவாய் ஆதாரங்களை முடக்கி மக்களுக்கு எந்த வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தி விடும்.
அதிலும் குறிப்பாக தமிழ்நாடுதான் இந்தச் சட்டத் திருத்தத்தால் கடுமையாக பாதிக்கப்படும். கடந்த திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெற்றது. கனிமக் கொள்ளைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றின் மீது பல்வேறு வரிகளும், அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தவணை முறையிலும் செலுத்தலாம் என்று சலுகை வழங்கப்பட்டதால், அவற்றில் பெரும்பாலான தொகை இன்னும் வசூலிக்கப்படவில்லை. இப்போது கனிமச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், கனிமக் கொள்ளை நடத்தியவர்களிடமிருந்து தமிழக அரசுக்கு வரவேண்டிய வருமானம் தடைபடும் ஆபத்து உள்ளது.
கனிமங்களைத் தாங்கி நிற்கும் நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் கடந்த 25.07.2024 ஆம் நாள் தீர்ப்பளித்த 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, கனிமங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாக அறிவித்தது. அந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தான் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசு கொண்டுவரும் சட்டத் திருத்தங்கள் சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர, மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக இருக்கக் கூடாது. எனவே, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.