சித்தராமய்யா 
தமிழ் நாடு

கர்நாடகத்தில் சாதிவாரி சர்வே அறிக்கை... இங்கு எப்போது?

Staff Writer

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு இரண்டாம் முறையாக நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் அடங்கிய அறிக்கை அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் வழங்கப்பட்டுள்ளது;  தமிழ்நாட்டிலும் சமூகநீதி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

”கர்நாடகத்தில் ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டில் முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அப்போதைய சித்தராமய்யா அரசு மேற்கொண்ட நிலையில், அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து புதிய தரவுகளைத் திரட்டும் நோக்குடன் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி & பிப்ரவரி மாதங்களில் இந்தப் பணிகள் முடிவடைந்திருந்த நிலையில், அதில் கிடைத்த தரவுகள் தொகுக்கப்பட்டு அதன் அறிக்கையை அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் மதுசூதன் நாயக்கிடமிருந்து முதலமைச்சர் சித்தராமய்யா பெற்றுக் கொண்டுள்ளார்.

கர்நாடகத்தில் சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு எவ்வாறு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியதோ, அதேபோல் தான் தமிழ்நாட்டிலும் சமூகநீதியை பாதுகாக்கும் நோக்குடன்  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை  சமூகநீதி கணக்கெடுப்பு என்ற பெயரிலாவது நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை நடத்துவதில் தமிழக அரசுக்கு எந்த நெருக்கடியோ, சிக்கலோ இல்லை. இந்த அடிப்படையை அரசு உணர வேண்டும்.” என இன்றைய அறிக்கை ஒன்றில் அன்புமணி கூறியுள்ளார்.

”தமிழ்நாட்டிலும் இதே முறையில் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும். இதற்குத் தேவையான மனிதவளம் தமிழ்நாட்டில் உள்ளது. கர்நாடகத்தில் இத்தகைய கணக்கெடுப்பை நடத்த ரூ.635 கோடி செலவான நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.700 கோடியில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தி முடிக்க இயலும். நடப்பாண்டில் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையின்  மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் சமூகநீதி சர்வேக்காக  ரூ.700 கோடியை ஒதுக்குவதற்கு எந்தத் தடையும் இல்லை; சட்டப்படியும் இதற்கு எந்தத் தடையும் இல்லை.


மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில்,  கடந்த காலங்களில் சேகரிக்கப்பட்ட விவரங்களை விட கூடுதலாக ஓபிசி சாதி விவரம் மட்டுமே சேகரிக்கப்படும். இது சாதிவாரி மக்கள்தொகையை அறிவதற்கு மட்டும் தான் பயன்படுமே தவிர, சமூக நிலையை அறிய உதவாது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஒட்டுமொத்தமாக 30 வினாக்கள் மட்டுமே எழுப்பப்பட்டு விவரங்கள் பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை பிறப்பு விவரம், முகவரி, குடும்ப உறுப்பினர் விவரங்கள், எழுத்தறிவு, இடம் பெயர்ந்தவரா? தொழில் ஆகியவை தான். ஒருவரின் சமூக பின்தங்கிய நிலையை அறிவதற்கு இந்த புள்ளி விவரங்கள் மட்டுமே போதுமானவை அல்ல. அதனால் தான் சமூக நீதியை நிலைநாட்ட மாநில அளவிலும் சாதிவாரி சர்வே எடுக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன்.


எந்த நேரமும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படலாம். அதை எதிர்கொள்ளவும் சமூகநீதி சர்வே அவசியம்.

இவை அனைத்துக்கும் மேலாக, ’’ ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சார பிரதிநிதித்துவம்  கிடைப்பதே உண்மையான சமூகநீதி  என்பது த.வெ.க.வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரி கணக்கீட்டு சர்வே மேற்கொள்ளப்படும்” என்பது தான் ஆளும் த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையின் முதல் வாக்குறுதி என்பதால் அதையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.” என்று அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.