தீபாவளி போனஸ் குறித்து பொய் கூறியதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மன்னிப்பு கோருவாரா? அவருக்கு பொய்தான் மூலதனமா என்று பா.ம.க. செய்தித்தொடர்பாளர் கே. பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
”தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு 20 நாள்களாகியும்கூட, 28.10.2014-ஆம் நாள் திங்கள்கிழமை இரவு வரை அவர்களுக்கு அது வழங்கப்படவில்லை என்று  பா.ம.க. நிறுவனர் இராமதாசு  நேற்று சமூக வலைத்தளங்கள் மூலம் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு ஆதரவாகவும் அரசுக்கு எதிராகவும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாத போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே போனஸ் வழங்கப்பட்டு விட்டதாகவும், உண்மைக்கு மாறான செய்திகளை இராமதாசு கூறுவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். உண்மையில் அவர் கூறியிருப்பது தான் அப்பட்டமான பொய்.” என்று பாலு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். 
அதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். 
”போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான போனஸ் அக்டோபர் 10-ஆம் தேதியே அறிவிக்கப்பட்டு விட்ட போதிலும்,  28-ஆம் தேதி இரவு வரை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை. கனரா வங்கியில் கணக்கு வைத்துள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் 28ஆம் தேதி இரவில் ஊக்கத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. மற்ற தொழிலாளர்களுக்கு இராமதாசின் கண்டனப் பதிவு  29-ஆம் தேதி காலை வெளியான நிலையில்  29-ஆம் தேதி காலை 11 மணிக்குப் பிறகுதான் போனஸ் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.  இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. 
மறுப்பு அறிக்கையில் கூட போனஸ் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யும் ஆணை கடந்த 25-ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது என்று தான் கூறியிருக்கிறாரே தவிர, போனஸ் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் எப்போது வரவு வைக்கப்பட்டது என்பதைக் கூறவில்லை.” என்று பாலு அழுத்தமாகத் தெரிவித்துள்ளார். 
”தமிழ்நாட்டில் இன்று மோசமான நிர்வாகம் நடைபெறும் துறை என்றால் அது போக்குவரத்துத் துறைதான். 28-ஆம் தேதி இரவு வரை போனஸ் வழங்கப்படாத நிலையில் அந்த உண்மையை ஒப்புக்கொள்ள துணிச்சல் தேவை. அந்த துணிச்சல் அமைச்சர் சிவசங்கருக்கு இல்லை. அதனால் தான் போனஸ் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாக அப்பட்டமான பொய் கூறி பிழைப்பு நடத்துகிறார். இப்படியெல்லாம் அரசியல் நடத்தத் தேவையில்லை. 
அமைச்சர் சிவசங்கர் கூறியது பொய் என்பதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், மனசாட்சி இருந்தால் தாம் கூறிய பொய்க்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் செய்வாரா?” என்றும் பாலுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--