தமிழ் நாடு

மாணவர்கள், விவசாயிகளுக்கு சர்டிபிகேட்டைக் கொடுத்துவிட்டு போராடுங்கள்!

Staff Writer

மாணவர்கள், விவசாயிகளுக்கு தேவையான சான்றிதழ்களை முன்வந்து அளித்து வருவாய்துறையினர் தொடர்ந்து போராடலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாசு கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கிவிட்டன. இதனைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வருவாய்த் துறையில் பணியாற்றுபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்கள் 10 சதவீதம் பங்களிப்பு என்பதை ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறையில் பணியாற்றும் அனைத்து நிலையிலான அலுவலர்களின்  உயிர், உடைமைகளைப் பாதுகாக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உட்பட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை  சங்கங்களின்  கூட்டமைப்பினர்  தமிழ்நாடு  முழுவதும் வருவாய்த் துறை  அலுவலர்கள்,  ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், நில அளவைத்துறை பணியாளர்கள் உட்பட்டோர் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

”இதற்கிடையே பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் மேற்படிப்பான நீட், ஜே,இ,இ  உட்பட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போது, இருப்பிட, வருவாய், சாதி சான்றிதழ்களை விண்ணப்பித்துள்ளனர். தங்களது போராட்டத்தால் விண்ணப்பித்த மாணவர்கள் இச்சான்றிதழ்களைப் பெற இயலாத நிலை உருவாகும் சூழல் உள்ளது. எனவே மாணவர்களின் எதிர்கால நலனைக்  கருத்தில் கொண்டு இச்சான்றிதழ்களை அளிக்க முன்வரவேண்டும்.” என்றும்,  

”விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனைக்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல, தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தான் அந்த நெல் விளைவிக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான அடங்கல் ஆவணத்தை கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெற்றுத் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தான் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படும்.” என்றும்,  

எனவே மாணவர்கள், விவசாயிகளுக்குத் தேவையான சான்றிதழ்களை முன்வந்து அளித்து கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடலாம் என்றும் கூறியுள்ள இராமதாசு, போராட்டத்துக்கு வாழ்த்துகளையும் அழுத்தமாகத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.