தமிழ் நாடு

தி.மு.க. அரசு இன்னும் எத்தனை பேரைக் காவுவாங்கும்? - இராமதாஸ்

Staff Writer

ராமதாஸ்உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்காக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் அதனைச் செயல்படுத்த சில வழிகாட்டுதல்களை வழங்கியபின்னும் அதை வழங்காமல் இழுத்தடித்து எத்தனை பேரை தி.மு.க. அரசு காவு வாங்கப்போகிறது என்று பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கண்ணமங்கலம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் கந்தன்-பூங்கொடி தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சதீஷ்குமார் பட்டப்படிப்பு படித்துவிட்டு கட்டடத் தொழிலாளியாக வேலை செய்கிறார். இளைய மகன் விஜயகுமார் (28) 2018-ம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்துவிட்டு பல்வேறு வேலைக்கு அரசு போட்டித் தேர்வுகளை எழுதி வந்துள்ளார்.

தைப்பூசத் திருவிழாவிற்கு குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்றுவிட்ட நிலையில் தனியே வீட்டில் இருந்த விஜயகுமார், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். தனது டைரியில் வேண்டும் வன்னியருக்கான இட ஒதுக்கீடு என எழுதி வைத்து அதைத் தனது கையில் இறுகப் பற்றியபடி இருந்ததாகக் கூறப்படுகிறது.

”தற்கொலை செய்துகொண்ட விஜயகுமாரின் உடலை கண்ணமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் கைப்பற்றி, விஜய்குமார் இறக்கும்போது கைப்பட எழுதிய கடிதம், அவரின் டைரியில் சில பக்கங்களில் எழுதிய வாக்குமூலத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் போலீசார் சடலத்தைக் கைப்பற்றிய போது டைரி மற்றும் லெட்டர் ஏதும் கைப்பற்றவில்லை என அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனை மூடிமறைக்க குடும்பத்தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக இறந்த விஜய்குமாரின் பெற்றோரை புகார் அளிக்குமாறு தி.மு.க.வினர் கட்டாயப்படுத்துகின்றனர்.” என்றும் இராமதாசு இன்றைய காலை அறிக்கையில் கூறியுள்ளார்.

”ஏற்கனவே நீட் தேர்வு மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அதனுடன் தி.மு.க. அரசின் சூழ்ச்சியால் உயர்நீதிமன்றம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்ததால் தற்கொலைகள் மேலும் தொடர்கின்றன. இன்னும் எத்தனை இளைஞர்களை இந்த அரசு காவு வாங்க உள்ளது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்விக்குறியாக உள்ளது.

இறந்த விஜயகுமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். மேலும் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.” என்றும் இராமதாசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.