பயில்வான் ரங்கநாதனிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை 
தமிழ் நாடு

ஐஸ்வர்யா அர்ஜூன் மீது அவதூறு- பயில்வான் ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு, விசாரணை!

Staff Writer

நடிகர் அர்ஜூன் சென்னை காவல் ஆணையத்தில் கொடுத்த அவதூறுப் புகாரின் பேரில் நடிகர், யூட்டியூபர் பயில்வான் ரங்கநாதன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 19ஆம் தேதி, சென்னை காவல் ஆணையத்தில் தன் மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நடிகர் அர்ஜூன் புகார் ஒன்றை அளித்தார். அது தொடர்பான அறிக்கை ஒன்றையும் நடிகர் அர்ஜூன் வெளியிட்டிருந்தார்.

அர்ஜூனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் இத்தாலியில் நடைபெற்ற நிலையில், அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறுகள் பரவியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை முறிந்துவிட்டதாகவும், அவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் உட்பட்ட கருத்துகள் சமூக ஊடகப் பக்கங்களில் பரவி வருவதாகக் கூறியிருந்தார்.

மேலும், இதுபோன்று தவறான உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்புபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அர்ஜூனின் மூத்த மகள் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகர், யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் மீது குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram