நீதிமன்றத்தை அவமதித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2024ஆம் ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றுக்கு சீமான் பேட்டியளித்திருந்தார். அதில், நீதித்துறையை அவமதித்தும் நீதிமன்ற செயல்பாடுகளை இழிவுபடுத்தியும் சீமான் கருத்துகளை தெரிவித்திருந்தார் என வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை போலீசில் புகார் கொடுத்தார். ஆனால், காவல் துறை சீமான் மீது வழக்கு பதிவு செய்யாததால் அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். ஆனால் சார்லஸ் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சார்லஸ், மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து சென்னை திருமங்கலம் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி விசாரணைக்கு ஆஜராகும்படி விரைவில் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு சம்மன் வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.