முதல்வர் விஜய் 
தமிழ் நாடு

ஊடகங்களை மிரட்டும் புதிய பாயாச-பாசிச அரசு : எடப்பாடி பழனிசாமி

Staff Writer

சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளிக்குள் மர்மநபர்கள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கூறியதாவது:

"பாலியல் தொல்லைக்கு ஆளான பள்ளி மாணவியின் பெற்றோர்கள் ஊடகப் பேட்டிகள் கொடுத்துள்ள நிலையில், இதனை விசாரிக்க வேண்டிய காவல்துறையோ, செய்தி வெளியிட்ட ஊடகங்கள், அவற்றை நீக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறது.

த.வெ.க. ஆட்சியில் காவல்துறை செயல்படும் லட்சணம் இது தானா ?

அரசுப் பள்ளி பாதுகாப்பற்ற இடமாக மாறி, ஒரு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பதை உங்கள் காவல்துறை விசாரிப்பதை விட்டுவிட்டு, செய்தி வந்த மறுகணமே முந்திக்கொண்டு வந்து நிற்பது வெட்கக்கேடான செயல்.

தமிழ்நாட்டில் விஜய் ஆட்சியில் காவல்துறையும் ரூட் மாபியா பாணியைக் கடைபிடிக்க உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா?

முக்கியமானவர்களின் வழக்கு என்றால் ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமா? விலை உயர்ந்த முதலமைச்சர் என்று நான் இவரை சொன்னது இந்த மனோபாவத்தின் காரணமாகத்தான்!

தற்போது இந்த அரசின் செயல்கள் அதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் பெண்களின், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், பாலியல் புகார்களை முறையாக விசாரிக்காமல் செய்தியே வரக்கூடாது என்று ஊடகங்களை மிரட்டும் இந்த புதிய பாயாச-பாசிச அரசுக்கு எனது கடும் கண்டனம்.

வண்டலூர் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram