தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு, சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் த.வெ.க. அரசை விமர்சித்து வருகின்றனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:
"வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கனவே சட்டத்துறை சந்தி சிரிக்க, மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை ஃபியூஸ் பிடுங்கிய நிலையில் இருக்க, தற்போது சிறைத்துறையும் அந்தப் பட்டியலில் சேர்ந்துவிட்டது.
மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் ஹைலைட்! எப்போது பார்த்தாலும் “மைக்” வெறி பிடித்து அலைந்து, தூக்கத்தில் கூட “அண்ணாதி.மு.க. .புராணம்” பாடிக் கொண்டிருக்கும் அமைச்சர் நிர்மல்குமாரின் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது. வெட்கக்கேடு!
ஏற்கனவே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய போதே தமிழக சிறைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் இந்த அரசுக்கோ, அமைச்சருக்கோ நேரம் இல்லை போலும்!
கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடும் நிலையில் தான் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளிலே இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?
தப்பியோடிய கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்த வேண்டும்." என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:
"ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத அரசாக இந்த த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது." என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி:
"போக்சோ வழக்குகள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதிகள் தப்பிச் செல்லும் அளவுக்கு மாவட்ட சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருந்தது கண்டிக்கத்தக்கது.
திரைப்படக் காட்சிகளில் மட்டுமே இடம் பெற்று வந்த கைதிகள் தப்பி ஓடுவது போன்ற காட்சிகள், நிஜத்திலும் நடக்கத் தொடங்கியிருப்பது நல்லதல்ல. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, சிறைத்துறை போன்றவற்றின் நிர்வாகம் பலவீனமடைந்து வருவதையே இது காட்டுகிறது.
சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடியதாகக் கூறப்படும் நேரத்திற்கும், இந்த நிகழ்வு குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நேரத்திற்கும் அதிக இடைவெளி இருப்பது இந்த நிகழ்வு குறித்து பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.
கைதிகள் தப்பி ஓடி 12 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை 4 பேர் மட்டும் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
கைதிகள் தப்பி ஓடியதன் பின்னணியில் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்." என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி:
"இந்த அரசால், குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியவில்லை… சிறையில் உள்ள குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியவில்லை! இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறது த.வெ.க.-வின் காவல்துறை?" என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்:
சமீபத்தில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குப் போன முதலமைச்சர், அதனடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழ்நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஏதேனும் உத்தரவுகளை பிறப்பித்தாரா?
ஒரு பக்கம் குழந்தைகள் வீட்டிலிருந்து மாயம் - மறுபக்கம் கைதிகள் சிறையில் இருந்து ஓட்டம் என்று சட்டமீறல்களின் அடையாளமாக ஆட்சி நடத்துவது தான் இந்த டம்மி முதலமைச்சரின் சாதனை.
தப்பித்த கைதிகள் அனைவரையும் உடனே பிடிப்பதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும்." என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர்:
"இது திடீரென நிகழ்ந்த ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. கடந்த 2023 யில் விழுப்புரத்திற்குப் பேருந்தில் கொண்டுசெல்லப்பட்டபோது இலங்கை கைதி ரியாஸ் கான் தப்பியோடியது, திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனைக் கைதி தப்பியது, 87 வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளி பாலமுருகன் போலீஸ் பிடியிலிருந்து மீண்டும் மீண்டும் தப்பியது,
சேலத்திலிருந்து கோவைக்குக் கொண்டுசெல்லும்போது பெருந்துறை அருகே கைதி தப்பியது, செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் காவலர்களைத் தாக்கிவிட்டு 12 பேர் தப்பியோடியது எனத் தமிழகத்தில் ஏற்கனவே பலமுறை சிறைக் கைதிகள் தப்பிக்கும் தொடர் பாதுகாப்புக் குளறுபடிகள் அரங்கேறியுள்ளன. முந்தைய நிகழ்வுகள் அனைத்தையும் உற்றுநோக்கினால், தமிழகச் சிறைத்துறையில், அதிலும் குறிப்பாகப் புறநகர், கிராமப்புற சிறைகளில் அடிப்படைக் கட்டமைப்புத் தொடர்ந்து பலவீனமாகவே இருந்து வருவது தெளிவாகிறது.
கிராமப்புறச் சிறைகளில் உடனடி முறையான கட்டமைப்பு மாற்றங்களும், தீவிரச் சீர்திருத்தங்களும் மிக அவசியமாகத் தேவைப்படுகின்றன.
தப்பியோடிய மற்ற கைதிகளை உடனடியாகப் பிடிப்பதோடு, புறநகர்ச் சிறைகள் உட்பட ஒட்டுமொத்தத் தமிழகச் சிறைத்துறையையும் முழுமையாக மறுசீரமைக்க உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்." என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.