ஆர். நல்லக்கண்ணு user
தமிழ் நாடு

நல்லக்கண்ணு மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Staff Writer

மூத்த பொதுவுடைமைத் தலைவர் ஆர். நல்லக்கண்ணு மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான இரா. நல்லக்கண்ணு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.

'தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த' சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தமிழ்நாடு காங்கிர கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

தனது101 வயது வரை பொதுவாழ்வில் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். தான் கொண்ட கொள்கையிலும், நடைமுறை வாழ்விலும் தன் இறுதி மூச்சு வரை சமரசம் இன்றி வாழ்ந்தவர். தமிழகத்தில் மட்டுமல்லாது, அகில இந்திய அளவில் மிக மூத்த பொதுவுடைமைத் தலைவர்.

வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவை மீட்கும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர். நெல்லை சதி வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு, 7 ஆண்டுகள் சிறை, 4 ஆண்டுகள் தலைமறைவு என நாட்டுக்காக பல இன்னல்களை தீரத்துடன் எதிர்கொண்டவர்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காகவும், தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுப்பதற்காகவும் களப் போராட்டத்தில் மட்டுமின்றி, நீதிமன்றத்திலும் போராடி வெற்றி கண்டவர். சுதந்திர இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடுகள், வன்கொடுமைகள், ஆணவக் கொலைகள் ஆகியவற்றை எதிர்த்து தனது இறுதி மூச்சுவரை போராடிய தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன்

எளிமையான பொதுவாழ்வு; வலிமையான போர்க்குணம்; உறுதியான கொள்கை பிடிப்பு; பக்குவமான அணுகுமுறை போன்றவையே அவரது அடையாளங்கள் ஆகும்.

விடுதலைச் சிறுத்தைகளின் மீது பேரன்பைப் பொழிந்தவர். எப்போதும் என்னைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தியவர். சிறுத்தைகளின் "அம்பேத்கர் சுடர்" விருதினைப் பெற்றுக் கொண்டு எமக்குப் பெருமை சேர்த்தவர்.

பொதுவாழ்வில், குறிப்பாக தேர்தல் அரசியல் களத்தில் இத்தகைய 'தூய்மைமிகு பேராளுமை' இனி எப்போது வாய்க்கும் என்னும் ஏக்கமே மிஞ்சுகிறது. எளிமை செம்மல் அய்யா நல்லக்கண்ணு அவர்களின் மறைவால் அரசியல் களத்தில் உருவாகியுள்ள வெற்றிடத்தைக் காலத்தாலும் இட்டு நிரப்ப இயலாது.

இந்திய ஒன்றிய அரசு அவரது ஈகம் நிறைந்த பொதுவாழ்வையும்; தேசத்தின் விடுதலைக்கான அறப்போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் போற்றும் வகையில் அவருக்கு தேசத்தின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதினை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் ஐயா நல்லகண்ணு. அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தூணாக விளங்கிய அவர், தமது வாழ்நாளில் எளிமையை கடைபிடித்து, லஞ்சம் மற்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர்.

பொதுமக்களின் நலனுக்காக போராடிய அவரது சேவை என்றும் நினைவுகூரப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவர் சார்ந்த இயக்கதிற்கும் எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ” என தெரிவித்துள்ளார்.

நாதக தலைவர் சீமான்

பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்த பெருந்தமிழர்!

ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்!

விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி!

வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்த பொதுவுடைமை பிதாமகன்!

தவெக கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ்

தமிழகத்தின் நில உரிமைப் போராட்டங்கள் தொடங்கி, இயற்கை வளங்களைக் காக்கும் களங்கள் வரை தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்தவர். அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும், எளிய மக்களுக்கும் ஒரே மாதிரியான மரியாதையையும் அன்பையும் தந்தவர்.

ஐயா நல்லகண்ணூ அவர்களின் மறைவு என்பது ஒரு இயக்கத்தின் இழப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவர் விட்டுச் சென்ற நேர்மை மற்றும் எளிமை எனும் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாப்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.