சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2017 முதல் நடைபெற்று வருகின்ற உரை நிகழ்வு பொன்மாலைப் பொழுது. இதுவரை 149 ஆளுமைகள் இதில் கலந்துகொண்டு உரையாற்றி உள்ளனர். சமீபத்தில் 150 வது நிகழ்வு நடைபெற்றது. இதில் நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் கலந்துகொண்டு ' நிலவின் நாட்குறிப்புகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சுருக்கமான உரையாக அமைந்ததுடன் பரந்துபட்ட வாசகர்களோடு விரிவான உரையாடல் எனவும் அமைந்தது அவரது நிகழ்வு. தன் வாசிப்பு அனுபவம், பணி அனுபவம் ஆகிய இரண்டு தளங்களில் இந்த உரையை உதயச்சந்திரன் நிகழ்த்தினார்.
தனது 5 வயதில் 'ரத்தின பாலா' என்ற குழந்தைகள் இதழை வாங்கியதில் தொடங்கி , நூலகம், காட்சி ஊடகத்தோடு ஒப்பிடுகின்ற பொழுது நூல்கள் வாசிப்பின் வலிமை, அமைய உள்ள பெருநூலகங்கள், தனது நினைவலைகளை 'ஆனந்த விகடன்' இதழில் எழுதிய போது அதற்கான தலைப்பை மக்களாட்சி மாண்புகளை பின்பற்றி தேர்ந்தெடுத்த விதம், பொன்மாலைப் பொழுது நிகழ்வுக்கு பெயரிடப்பட்ட விதம் (உதயச் 'சந்திரன்' தான் பொன்மாலைப் பொழுதைத் தொடங்க இயலும் என பொன்மாலைப் பொழுதின் முதல் பேச்சாளர் நெல்லை ஜெயந்தா கவித்துவமாக குறிப்பிட்டாலும், அந்நிகழ்வில் பின்னர் பேச வந்த நிதித்துறை செயலாளர் 'எல்லாப் புகழும் எனக்கே 'என எடுத்துக் கொள்ளாமல் அந்தப் பெயர் சூட்டலுக்கான வெகுமதியை அதைச் சூட்டியவர் பக்கம் திருப்பி விட்டார்) ஆகியற்றை தன் உரையில் அவர் நினைவுகூர்ந்தார்.
2017 இல் தான் கல்வித்துறை செயலாளராக இருந்தபோது இந்நிகழ்வைத் தொடங்கி, அதை தொடர்ந்து கண்காணித்து 150 ஆவது நிகழ்வு வரை வந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்வில் பங்கேற்பதைத் தவிர்க்க முயன்று, நண்பர்களின் அன்புத் தொல்லையால் தவிர்க்க முடியாமல் பங்கேற்றிருப்பதாகச் சொன்ன அவர், ” அமெரிக்காவின் Berkeley - யில் மார்க் ட்வைனுக்கு ஒரு நூலகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது போல் தமிழ்நாட்டில் திருச்சி, நெல்லை, கோவை, கடலூர், சேலம் ஆகிய இடங்களில் அமைய இருக்கின்ற பெரு நூலகங்களில் புதுமைப்பித்தனுக்கும் பாரதியாருக்கும் சிலைகள் அமையும்’’ என்ற தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
உரை முடிந்ததும் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
உங்கள் பணிச் சூழலில் சந்தித்த தோல்விகள் மற்றும் நெருக்கடிகள் குறித்து சொல்லுங்கள் என ஒரு மாணவர் கேட்டார்.
“தோல்விகள் பற்றி பெரிய பட்டியலே உண்டு அதைத் தனியாக சொல்கிறேன்’’ என்று நயமாகச் சொல்லிய அவர், ‘’ பணிச்சூழல் நெருக்கடிகள் பற்றி தமிழ்நாடே அறியும்’’ என்று நகைச்சுவையோடு குறிப்பிட சிரிப்பலை. ”நான் செய்ய விரும்பும் செயல் தமிழ்ச் சமூகத்திற்கு பயனளிக்கும் செயலாக இருந்தால், அழுது அடம் பிடிக்கும் ஒரு குழந்தை போல் அடம்பிடித்து அதை நிறைவேற்றுவதை எனக்கு நெருக்கமான அலுவலர்கள் நன்கு அறிவார்கள்’’ என்று குறிப்பிட்டார்.
இளைஞர்களுக்கான கவனச்சிதறல் பற்றி கேள்வி கேட்க வந்த ஓர் இளைஞர் போதைப் பழக்கம், மதுப்பழக்கம், திருமணம் என்று தனது கேள்வியை நீளமாக வளர்த்துக் கொண்டே செல்ல... மெலிதான புன்னகையுடன் குறுக்கிட்டு "நீங்கள் பட்டியலிடும் கவனச்சிதறல்களில் திருமணம் சேர்க்கப்பட வேண்டியதல்ல" என்று கூற அரங்கம் அதிர்ந்தது.
நிதிநிலை அறிக்கை தயாரித்த பொழுது , அதில் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் இடம்பெறச் செய்தது, மதுரை பாப்பாபட்டி- கீரிப்பட்டி ஊராட்சிகளில் பல ஆண்டுகள் நடக்காமல் இருந்த தேர்தல்களை நடத்தியது, தனது கல்லூரி காலத்தில் தனக்கு மறுக்கப்பட்ட வங்கியின் கல்விக் கடனை ஈரோடு ஆட்சியர் ஆனபோது பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு ரூபாய் 110 கோடி அளவில் வழங்கச்செய்ததும் தனது பணி அனுபவத்தில் முக்கியமானவை என்றார். ஆனாலும் தன் செயல்களின் மிகச் சிறந்த விமர்சகராக இருந்த - தற்போது நினைவில் வாழும் தன் அன்னையார் ( திருமதி லீலாவதி தங்கராஜ் ) கீழடி ஆய்வுகளை வெளிக்கொணர்ந்து பிரபலப்படுத்தியதைத்தான் ஆகச் சிறந்த சாதனை என்று மதிப்பிட்டதாக குறிப்பிட்டார்.
நூலகம், புத்தகங்கள், புத்தகத் திருவிழா, பன்னாட்டுப் புத்தக திருவிழா, பாட நூல்கள் மறுசீரமைப்பு, மாதம் தோறும் 10 கோடி பேர் பார்வையிடும் 75 லட்சம் மின்னூல்களை கொண்ட தமிழிணையக் கல்விக் கழகம், திருக்குறள் முழுமையும் பள்ளியில் பாடமாக வைத்தது, மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டம் புதுமைப்பெண் திட்டம், என அவர் பங்களிப்பு மிக அழுத்தமாகப் பதித்திருந்தவை பல பணிகள் என்பதால் அவரது பதில்கள் அனுபவச் செறிவாக இருந்தன.
சுற்றுலா, கடல் ஆய்வுகள், தமிழிசை, TN ஸ்டார்ட் அப் உள்ளிட்ட பல பொருளாதாரச் செய்திகள், பெற்றோரியம் ( Parenting), பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சியின் கடல் தாண்டிய வீச்சு ஆகியவை பற்றி தன் கருத்துகளை அவர் பகிர்ந்துகொண்டார். கல்லூரிக் காலத்தில் தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலைப் படித்துவிட்டு அதில் வரும் நாயகியின் இல்லத்தைத் தேடி கும்பகோணம் நகர வீதிகளில் சுற்றியிருக்கிறார். வீட்டைக் கண்டு பிடிக்க முடியாத நிலையில் அங்கே ஒரு பதிப்பகத்தைக் கண்டு நூல்களை வாங்கித் திரும்பி இருக்கிறார்.
பொன்மாலைப் பொழுது நிகழ்வில் ஏற்கெனவே கலந்துகொண்டிருந்த பல ஆளுமைகள் வந்திருந்தனர். அவர்கள் இந்நிகழ்வின் சிறப்பு பற்றி தம் கருத்துகளைப் பகிர்ந்தனர். மாலன், மனுஷ்யபுத்திரன், நெல்லை ஜெயந்தா, பாரதி பாஸ்கர், சங்கர சரவணன், ஆழி செந்தில்நாதன், ஒளிவண்ணன், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், ஊடகர் கார்த்திகைச் செல்வன், அரிமளம் பத்மநாபன், பேராசிரியர்கள் அரசேந்திரன், வீ. அரசு, மங்கை, நாகப்பன், அருட்பா சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பொது நூலகத்துறை இயக்குனர், உயர் கல்வித் துறை செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தலைமை நூலகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
பொன்மாலைப் பொழுதில் ஒன்று முதல் 150 நிகழ்வுகள் வரை பேசிய ஆளுமைகளைப் பற்றிய குறிப்பும், அவர்களின் உரை சுருக்கத் தொகுப்பும் கொண்ட நூலையும் உதயசந்திரன் வெளியிட்டார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூலின் மென்படிகளும் பலருக்கும் பகிரப்பட்டது. சாகித்திய அகாடமி விருதாளர்கள் 10 பேர், பெண் ஆளுமைகள் 20 பேர், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கல்வியாளர்கள், அறிவியலாளார்கள், திரைக்கலைஞர்கள், தொழில் முனைவோர் என பலதரப்பட்ட ஆளுமைகளின் உரைசுருக்கத் தொகுப்பான அந்த நூல் அரியதோர் ஆவணம் என்பதை நிகழ்ச்சியில் பேசிய பலரும் பதிவு செய்தனர்.
அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp