க. பொன்முடி
க. பொன்முடி 
தமிழ் நாடு

மீண்டும் அமைச்சர் ஆகிறார் பொன்முடி!

Staff Writer

பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், பொன்முடியை மீண்டும் அமைச்சராக பரிந்துரைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த இரு தினங்களுக்கு முன் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பொன்முடி எம்.எல்.ஏ.வாக இருந்த திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆகியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, பொன்முடி அமைச்சராகவும் மீண்டும் பொறுப்பேற்க இருக்கிறார்.

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை இணைத்து தனது பரிந்துரையுடன் ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை காலை பொன்முடி மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகத் தெரிகிறது.