துறையூரில் கோரிக்கையுடன் சென்ற நபர் மீது சட்டமன்ற துணை சபாநாயகர் தாக்குதல் நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
“தமிழகத்தில் மக்களின் கோரிக்கைகளை முன்வைக்கச் செல்லும் நபர்களுக்கே உரிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.
கோரிக்கையுடன் சென்ற ஒருவர், சட்டமன்ற துணை சபாநாயகரால் தாக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மிரட்டப்பட்டு காணொளி வெளியிட வைக்கப்பட்டதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிகவும் கண்டனத்திற்குரியவை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், பொதுமக்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்குத் தீர்வு காண வேண்டுமே தவிர, அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனியும் மௌனம் காக்காமல், உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட நபரின் புகாரின் அடிப்படையில் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்.
தாக்குதல் மற்றும் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதிகாரம் என்பது மக்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் குரலுக்குச் செவிசாய்ப்பதற்குமே தவிர, அவர்களை அச்சுறுத்துவதற்கோ அடக்குவதற்கோ அல்ல என்பதைப் பொறுப்பில் இருப்பவர்கள் உணர வேண்டும்.
ஜனநாயகத்தில் மக்களின் கருத்துரிமையும், கேள்வி கேட்கும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.