பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர் 
தமிழ் நாடு

ஊழலை எதிர்க்கும் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

Staff Writer

விடுதலை இந்தியாவின் மிகப் பெரும் ஊழலாக உருவெடுத்துள்ளது 'நீட்' ; 'நீட்' ஊழலை எதிர்க்கும் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துகிறது தமிழ்நாடு அரசின் காவல்துறை; மாணவர்களின் ஜனநாயக உரிமையை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை : 

” தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் கேட்கும் அளவு பணம் செலுத்த முடியாததால், 'நீட்' நடைமுறையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், அடுத்து நடக்கும் 'நீட்' எழுத, மீண்டும் பயிற்சி மேற்கொள்கின்றனர். மாணவர்களின் இளமைப் பருவம் தொலைந்து போகிறது, பயிற்சி நிறுவனங்கள் இலாபத்தை குவிக்கின்றனர்.

தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் கேட்கும் கட்டணத்தை செலுத்திட வாய்ப்புள்ளவர்கள் 'நீட்' நடைமுறையில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவப் படிப்பில் சேர்ந்து விடுகின்றனர்.

தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் வணிகச் செயல்பாடுகளுக்கு சட்டப்படியான பாதுகாப்பு தருவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'நீட்' நடைமுறை, மருத்துவக் கல்விக்கும், பொதுச் சுகாதாரக் கட்டமைப்பிற்கும் மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

'நீட்' நடைமுறையில் நடக்கும் பெரும் முறைகேடுகள் ஒன்றிய அரசின் தேசிய தேர்வு முகமையாலேயே (NTA) நிகழ்த்தப்படுகிறது.

மருத்துவக் கல்வியில் வணிக மயத்தை ஒழிப்பதும், தரத்தை உறுதிசெய்வதுமே 'நீட்' நடைமுறையின் அடிப்படை நோக்கங்களாக ஒன்றிய அரசு கூறியது‌.

'நீட்' நடைமுறைக்கு வந்து பத்தாண்டு கால அனுபவத்தில் இரண்டு நோக்கமும் நிறைவேறவில்லை.

இரண்டு நோக்கத்திலும் 'நீட்' தோற்றது என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கும் ஒன்றிய அரசு, 'நீட்' இரத்து செய்ய வேண்டும் என்று போராடும் மாணவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது.‌

'நீட்' நடத்துவதிலும் முறைகேடு, 'நீட்' நடைமுறை மூலம் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கையிலும் முறைகேடு.

முறைகேட்டிற்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய அரசு பதவிவிலக வேண்டும் என்று மாணவர்கள் போராடினால், மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மறுக்கும் ஒன்றிய அரசு, மாணவர்களை அச்சுறுத்த, மிரட்டி, அடிபணிய வைக்க காவல்துறை மூலம் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது.

உலக வர்த்தக அமைப்பின் சேவையில் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தம் (WTO-GATS) உட்பட அந்நிய நாடுகளின் பெரும் முதலாளிகளின் தூண்டுதலால், 'நீட்' நடைமுறையை இந்தியா முழுவதும், அனைத்து மாநில அரசுகள் மீதும் திணித்த திரு.‌நரேந்திர மோடி அரசின் அமைச்சர்கள், 'நீட்' மோசடியை கண்டித்து, 'நீட்' முற்றிலுமாக விலக்கிக் கொள்ள போராடும் மாணவர்களை, அந்நிய சக்திகள்தான் தூண்டுகிறது என்ற பகிரங்கமான பொய்யை திரும்பத் திரும்ப கூறிவருகின்றனர்.

'நீட்' நடைமுறையில் மாபெரும் மருத்துவக் கல்வி ஊழலுக்கு வித்திட்டுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான ஒன்றிய அரசிற்கு ஆதரவாக, திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்படுவது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'நீட்' ஊழலுக்கு துணை நிற்கும் ஒன்றிய அரசின் காவல்துறை, பேட்ஜ் அணியாத, அடையாளம் காண இயலாத நபர்களைக் கொண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதைப் போலவே, தமிழ்நாடு அரசின் காவல்துறையும், பேட்ஜ் அணியாத நபர்களை வைத்து மாணவர்கள், வாலிபர்களை கொடூரமாக தாக்கியுள்ளதாக, தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களும் வாலிபர்களும் தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் போராட்டத்தில், இதுநாள் வரை பேட்ஜ் அணியாத நபர்களை கொண்டு மாணவர்கள் மீது தாக்குதலை தமிழ்நாடு அரசின் காவல்துறை நடத்தியதில்லை. தில்லியில் பாஜக அரசு கையாளும் அதே உத்தியை தமிழ்நாட்டில் தவெக அரசு கையாண்டுள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

மாண்புமிகு முதல் அமைச்சர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையின் ஆராஜகப் போக்கை மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் கண்டிக்கவில்லை.

போராடும் மாணவர்களிடம் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் பேசவில்லை. அதற்கு நேர்மாறாக, காவல் துறையின் அத்துமீறலை ஆதரிக்கும் வகையில், "மாணவர்களை அப்புறப்படுத்தவே காவல்துறை முயற்சி செய்தது" என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்த எந்த கவலையும் இல்லாமல் அமைச்சர்கள் பேசியுள்ளது மனிதாபிமானமில்லாத, ஜனநாயகத்திற்கு எதிரான அணுகுமுறை.

இந்திய குடிமக்களுக்கு போராடும் உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 வழங்கியுள்ளது.

தங்களின் கருத்தை வெளிப்படுத்தும் சட்டப்படியான உரிமையின் அடிப்படையில் வழக்கமாக போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் இடத்தில் கூடுவதற்கு மாணவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மாற்று இடம் தருவதாக இருந்தாலும், மாற்று யோசனை ஏதேனும் இருந்தாலும், தமிழ்நாடு அரசு நேரடியாக மாணவர்களிடம் பேசி இருக்க வேண்டும்.

அமைச்சர்கள் போராட்டக் களத்தில் இருக்கும் மாணவர்களிடம் பேசி இருக்க வேண்டும்.

காவல் துறை உயர் அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் மாணவர்களிடம் நடந்துக் கொண்டு இருக்க வேண்டும்.

இவை எதையுமே செய்யாமல், ஐம்பதாண்டுகளாக இயங்கிவரும், மாணவர்கள், இளைஞர்கள் உரிமைகளுக்காகப் போராடி வரும் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்களை கொடூரமாக தாக்கி, அவர்களின் உடலில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொண்டது பெரும் கண்டனத்திற்கு உரியது.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதே போன்ற அடக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் நடந்ததாக தெரிகிறது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே சென்று மாணவர்களை கைது செய்வதும், தடுப்புக் காவலில் வைப்பதும் மக்களாட்சி மாண்புகளுக்கு ஏற்புடையதல்ல.

தங்களின் கருத்தை, உணர்வை நியாயமான முறையில் வெளிப்படுத்த மாணவர்களுக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை மறுப்பது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் செயலாகும்.

இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு உள்ளது என்றால் மாணவர்களின் போராடும் உரிமை ஏன் மறுக்கப்படுகிறது?

ஐனநாயகன் என்றத் தோற்றத்துடன் வெள்ளித்திரையில் வாளை சுழற்றுவதும், நிஜ வாழ்க்கையில், வீதியில் நீதிக்காக போராடும் மாணவர்களை தடிகொண்டு காவல்துறையினர் தாக்குவதை அனுமதிப்பதும் வேதனைக்குரிய அணுகுமுறை.

ஜனநாயகனாக திரையில் தோன்றி, ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த உடன் ஜனநாயகதிற்கு நேரெதிராக செயல்படுவது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது‌‌.

மூதறிஞர் இராஜாஜி அவர்கள் ஒரு பகுதி பள்ளிகளை மூடிவிட்டு, இருக்கும் மற்ற பள்ளிகளில் பாதி நாள் வகுப்பு, மீதி நாள் தங்களின் வசிப்பிடங்களில் ஏதாவது ஒரு வேலைக்கான பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவித்தவுடன், "இது தொழில் கல்வி அல்ல, குலக் கல்வி" என்று வெகுண்டெழுந்தார் தந்தை பெரியார்.

மாணவர்களின் எழுச்சி மிகுந்த போராட்டத்தின் விளைவாக மூதறிஞர் இராஜாஜி அவர்கள் பதவியை இராஜினாமா செய்தார்.

கர்மவீரர் காமராசர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தார்.

மூடியப்பள்ளிகளை திறந்தார்.‌ மாணவர்கள் முழு நேரம் கல்வி கற்க, விளையாட்டு உள்ளிட்ட கற்றல் இணைச் செயற்பாடுகளை முழுமையாக பள்ளிகளில் தொடரச் செய்தார்.

மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட கர்மவீரர் காமராசர் பெயரை, கடந்த ஆட்சியில் அறிமுகப் படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்திற்கு வைத்த கையோடு, போராடும் மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி, கொடூரமாக தாக்க அனுமதித்தது, கர்மவீரர் காமராசரையும், தந்தை பெரியாரையும் இழிவுபடுத்தும் செயலாகும்.

மக்களாட்சியில் மக்களின் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். மக்களின், மக்களால், மக்களுக்கான ஆட்சியே மக்களாட்சி. இதில் மக்களின், மக்களால் என்ற கோட்பாட்டை புறம் தள்ளி, மக்களின் எதிர்பார்ப்பு, மக்களின் கருத்து ஆகியவற்றுக்கு மதிப்பளிக்காமல், மக்களுக்கு எது நல்லது என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம் என்று யாராவது கூறினால் அது மக்களாட்சியை சிதைக்கும் செயல். மக்களாட்சிக்கு எதிரான இத்தகைய நடைமுறையில் யாரேனும் ஆட்சி நடத்த துணிந்தால், அவர்களை ஒரு நொடி கூட ஆட்சியில் நீடிக்கச் செய்யக் கூடாது என்று பாபாசாகேப் டாக்டர் பி‌‌. ஆர். அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியல் சாசன நிர்ணய சபையில் நவம்பர் 25, 1949 அன்று ஆற்றிய உரையில் தெளிவுபட கூறியுள்ளார்.

உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ள திரு. நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த 'நீட்' நடைமுறையை இரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மாணவர்கள் போராடுகிறார்கள்.

குழந்தைகளும், இளைஞர்களும் தங்களின் தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்களை வற்புறுத்தி தனக்கு வாக்களிக்க வைத்ததாக கூறிக் கொள்ளும் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள்; ஒன்றிய அரசின் குழந்தை விரோத, இளைஞர்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டு; குழந்தைகள் நலனுக்காக போராடும் மாணவர்கள், வாலிபர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை தமிழ்நாடு ஏற்காது.

ஆசிரியர்களும், பெற்றோரும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள்.

மாணவர்கள், இளைஞர்களுடன் இணைந்து 'நீட்' நடைமுறையை முற்றிலுமாக இரத்து செய்ய தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராடும் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கக்கூடாது.

காவல் துறையினராலும், காவல் துறை பேட்ஜ் இல்லாத நபர்களாலும் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர் தர மருத்துவ சிகிச்சை வழங்குவதோடு, மாணவர்கள் போராட்டம் நடத்த சட்டப்படியான அனுமதியை வழங்கிட வேண்டும்.

மாணவர்கள் மீது காவல் துறை நடத்திய வன்முறையை கண்டித்தும், தமிழ்நாடு அரசு 'நீட்' நடைமுறையை இரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் அமைப்புகளும் , பெற்றோர் அமைப்புகளும் கோரிக்கை இயக்கங்களை நடத்திட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

ஜனநாயகத் தன்மையுடன் நடந்து கொள்ள தமிழ்நாடு அரசு தவறினால்; கல்வியாளர்கள், கல்வி ஆர்வலர்களை ஒன்று திரட்டி 'நீட்' ஒழிப்பு போராட்டத்தை மாணவர்களுடன் இணைந்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை நடத்தும்.

மக்களாட்சி மாண்புகளையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் காக்கின்ற போராட்டத்தில் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.” என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்லார்.