தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்தில் 6 பேர் பலியானதாகவும், அவர்களில் 5 பெண்கள், ஒரு ஆண் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், விபத்துக்குள்ளான பேருந்துகளில் சிக்கி, காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தென்காசி அரசு மருத்துவமனையில் இதுவரை 25 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை 11 மணியளவில், பல்லடத்திலிருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும், ராஜபாளையத்திலிருந்து தென்காசி நோக்கி வந்த மற்றொரு தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
விபத்து நேர்ந்த போது, இரண்டு பேருந்துகளிலும் முழு அளவில் பயணிகள் இருந்துள்ளனர். இதனால் பாதிப்பும் அதிகளவில் நேரிட்டுள்ளது.
இந்த விபத்தில், ஒரு பேருந்தின் முன்பகுதியும், மற்றொரு பேருந்தின் பின் பகுதியும் கடுமையாகச் சேதமடைந்திருக்கிறது. ஒரு பேருந்தின் பின் பக்க இருக்கைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதன் மூலம், அதிலிருந்த பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.