சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்துறையினர் செய்த கொலை வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டார். நேற்றைய இடமாற்றலில் அவர் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு, தலைமையிடக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைப் போல, முதலமைச்சரின் சட்டப்பேரவைத் தொகுதியான சென்னை, கொளத்தூர் பகுதியின் காவல் துணை ஆணையராக இருந்த பாண்டியராஜன் பன்னாட்டு நிறுவன அதிகாரியை விசாரணை செய்ததில் அவர் உயிரிழந்தார். அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான பிரச்னை நீடித்துவரும் நிலையில், அவரைக் கட்டாயக் காத்திருப்பில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அவரும் நேற்று இடம் மாற்றப்பட்டு, பழனியில் உள்ள பதினான்காவது பிரிவு சிறப்புக் காவல் படையின் கட்டளைத் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, திருப்புவனம் படுகொலை தொடர்புடையவராகக் குற்றஞ்சாட்டப்படும் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்துக்குப் பதிலாக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, காவல் படுகொலை பிரச்னை பெரிதானதுமே சண்முகசுந்தரம் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது!