காப்புரிமை பெற்ற கால்நடை மருத்துவப் பேராசிரியர்கள் 
தமிழ் நாடு

புதிய கருவியை வடிவமைத்து காப்புரிமை பெற்ற கால்நடை மருத்துவப் பேராசிரியர்கள்!

Staff Writer

கால்நடைகளில் அறுவைசிகிச்சைக்கு உதவும் ஒரு கருவியைக் கண்டுபிடித்ததுடன் அதற்கு காப்புரிமையும் பெற்று அசத்தியுள்ளனர் தமிழ்நாடு கால்நடைமருத்துவ அறிவியல் பல்கலைக் கழக ப் பேராசிரியர் குழுவினர்.

விலங்குகளில் அறுவை சிகிச்சையின்போது மயக்கமருந்து அளித்தபின்னர் வாய்வழியாக சுவாசிக்க மூச்சுக்குழாய் குழல் செலுத்துவர். அச்சமயம் அதற்கு உதவும் ஒளிரூட்டும் கருவியைத்தான் இவர்கள் வடிவமைத்து காப்புரிமை பெற்றுள்ளனர்.

ஒளிரூட்டும் கருவி

இந்தக் கருவி, மயக்க நிலையில் உள்ள விலங்குகளுக்கு மூச்சுக்குழாய் குழல் (Endotracheal Tube) சரியான முறையில் செலுத்துவதற்குத் தேவையான வெளிச்சத்தை வழங்குகிறது. இதன் மூலம் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழலை எளிதாகவும் துல்லியமாகவும் செலுத்த உதவுவதுடன், மயக்க மருந்து மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளை பாதுகாப்பாக மேற்கொள்ளவும் துணைபுரிகிறது.

காப்புரிமை

இந்த கண்டுபிடிப்பாளர்கள் குழுவில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர்கள்:

முனைவர் ச. செந்தில் குமார், முனைவர் ச. விக்னேஸ்வரன், முனைவர் ச. தர்மசீலன், முனைவர் ச. கதிர்வேல், முனைவர் த. விஷ்ணு குருபரன், முனைவர் ஏ. வெங்கடேசகுமார் மற்றும் முனைவர் ரா. தங்கதுரை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

"எளிமையான பயன்பாடு மற்றும் கால்நடை மருத்துவர்களின் நடைமுறைத் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கருவி, பல்வேறு கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருத்துவச் செயல்முறைகளில் பயனுள்ளதாக அமையும்,'' என கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் முனைவர் ச.செந்தில்குமார் தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram