தமிழ் நாடு

தொழிலாளர் தொகுப்பு சட்டங்களுக்கு எதிராக டிச. 8இல் ஆர்ப்பாட்டம் - சிபிஎம், சிபிஐ, விசிக அறிவிப்பு!

Staff Writer

தொழிலாளர் உரிமைகளை பறிக்கும், தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் சார்பில் டிசம்பர் 8இல் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், விசிக தலைவர் தொல் திருமாவளவன், சிபிஐ(எம்.எல்) மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘தொழிலாளர் வர்க்கத்தின் மீது கடுமையான தாக்குதலை நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தொடுத்துள்ளது. கார்ப்பரேட் - இந்துத்துவ கூட்டணியின் வெளிப்பாடாகவே 29 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றுகிற சட்டங்கள் அமைந்துள்ளன. நூற்று ஐம்பது ஆண்டு கால தொழிலாளர் போராட்டங்கள் ஈட்டித் தந்த உரிமைகளை முற்றிலுமாக நீர்த்துப் போகச் செய்யும் தொகுப்பு சட்டங்கள் ஏற்கத்தக்கதல்ல, வன்மையான கண்டனங்களுக்கும் உரியதாகும்.

ஊதியப் பாதுகாப்பு, வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்புகள் எல்லாவற்றையுமே கேள்விக்கு உள்ளாக்குகிற தொழிலுறவு சட்டத்தொகுப்பு 2020, சம்பளத் தொகுப்பு 2019, பணித்தலப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் சட்ட தொகுப்பு 2020 மற்றும் சமூகப் பாதுகாப்பு தொகுப்பு 2020 ஆகிய சட்டங்களைக் கொண்டு வந்த ஒன்றிய அரசு நவம்பர் 21, 2025 முதல் அவற்றை நடைமுறைப்படுத்த நிர்வாக ரீதியிலான அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது.

இவற்றில் மூன்று தொகுப்பு சட்டங்கள் கோவிட் காலத்தில் இருந்த சமூக முடக்கம், தனி மனித விலகல், திரள்வதற்கு இருந்த தடைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி கொண்டு வரப்பட்டவை. துயர காலத்தில் கூட கார்ப்பரேட் நலன்களுக்காக மக்களின் துயரையே மோடி அரசு பயன்படுத்திய ஜனநாயக விரோத, தொழிற்சங்க விரோத நடவடிக்கையாகும் அது.

இருப்பினும் தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டங்கள், அகில இந்திய வேலை நிறுத்தங்கள் காரணமாக அதன் அமலாக்கம் தள்ளிப் போடப்பட்டு இருந்தது. பீகர் தேர்தல் முடிகிற வரை காத்திருந்து இப்போது நடைமுறைப்படுத்த முனைந்திருப்பது மக்களுக்கு இழைத்திருக்கிற அப்பட்டமான துரோகமாகும்.

இந்த தொகுப்பு சட்டங்கள் முதலாளிகளுக்கு கட்டற்ற அதிகாரத்தை தருகிறது. 100 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் ஆலை மூடலுக்கு அனுமதி தேவை என்றிருந்த நிலை 300 தொழிலாளர்கள் என மாற்றப்பட்டு இருப்பதும், தொழிலாளர் குறித்த தொகுப்பு சட்டங்கள் தரும் வரையறைகளும் பெரும்பான்மை தொழிலாளர்களை சட்டப் பாதுகாப்பில் இருந்து வெளியே வீசி எறிவதே ஆகும்.

அமைப்புசாரா உழைப்பாளிகளின் நலனை பாதுகாக்கவே இந்த தொகுப்பு சட்டங்கள் என்கிற ஒன்றிய அரசின் வாதம் கடைந்தெடுத்த பொய்யே அன்றி வேறொன்றுமில்லை. காலமுறை நியமனங்கள் என்பது அமைப்புசார் தொழில்களிலேயே கூட நிரந்தர நியமனங்களை காலி செய்து அத்த கூலி முறைமையை அரங்கேற்றுகிற ஏற்பாடு ஆகும். அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பிற்கு குறைந்தபட்ச உத்தரவாதம் கூட இல்லை. "அமர்த்து துரத்து" என்ற நீண்ட கால கார்ப்பரேட் கனவுகளை முழுமையாக இந்தச் சட்டங்கள் நனவாக்க போகின்றன. நிர்வாகங்கள் மீதான அரசின் கட்டுப்பாடு, கண்காணிப்பு தளர்த்தப்படுகிற அம்சங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. தொழிலாளர்களின் சங்கம் சேரும் உரிமை, வேலை நிறுத்த உரிமை உள்ளிட்ட போராட்ட உரிமைகள் பறிக்கப்படும்.

தொழிலதிபர் அமைப்புகளும், நவீன தாராளமய ஆதரவு பிரமுகர்களும் இந்த "சீர்திருத்தங்களை" வரவேற்று இருப்பதே இந்த தொகுப்புச் சட்டங்களின் நோக்கங்களையும் இலக்குகளையும் அம்பலப்படுத்துகின்றன. "தொழிற்சங்கம் அற்ற உலகம்" என்ற நவீன தாராளமய இலக்கை நோக்கிய பயணமாகவே ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.

"முதலீட்டாளர் நம்பிக்கை" என்ற நவீன தாராளமய சொல்லாடலானது, கார்ப்பரேட் லாபங்களுக்கும், செல்வக் குவிப்புக்கும் வழி வகுப்பதே ஆகும். முதலாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் வேலை வாய்ப்பையும் வருமான உயர்வையும் உருவாக்கும் என்ற உலகமய காலத்து கதையாடல்கள் எல்லாம் பொய்த்துப் போய் விட்டன. உண்மையில் வேலையற்ற வளர்ச்சியாகவோ, வேலை பறிப்பு வளர்ச்சியாகவோதான் அவை அமைந்துள்ளன.

இந்தியாவில் 11 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் அத்தக் கூலிகளாக பல்லாயிரம் மைல்கள் கடந்து வந்து வேலை பார்க்கிற அவலத்தையே தேசம் கண்டு வருகிறது. "காத்திருப்பு படையாக" வேலையின்றியும், பல கோடி பேரை கவுரவமான வேலையின்றி வைத்திருப்பதும் அவர்களின் பேர சக்தி மீது தாக்குதல் தொடுக்கும் உத்தியேயாகும். இதுதான் மோடி அரசின் சாதனை. அதேநேரம் வறுமைக்கு ஆட்பட்ட தொழிலாளர்கள் மேலும், மேலும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், மறுபக்க கதை வித்தியாசமானது. 2014 இல் இந்தியாவில் டாலர் பில்லியனர்கள் 70 பேர் இருந்தார்கள் எனில், 2025 இல் 358 டாலர் பில்லியனர்களாக ஏழு மடங்கு அதிகரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு உரிமையும் நீண்ட நெடிய போராட்டங்களின், விலைமதிப்பற்ற தியாகங்களின் விளைவாகும். ஆகவே, தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து அவர்களை நிராயுதபாணிகளாக மூலதனத்தின் தாக்குதலுக்கு முன்பாக நிறுத்துகிற இத்தொகுப்பு சட்டங்களை இடதுசாரிகளும், இந்திய தொழிற்சங்க இயக்கமும் அனுமதிக்க முடியாது. மக்கள் கருத்தை திரட்டுவதும், ஜனநாயக சக்திகளை இணைப்பதும் இடதுசாரிகளின், ஜனநாயக சக்திகளின் முன்பாக உள்ள பெருங்கடமையாகும்.

இந்த சட்டத் தொகுப்புக்கான விதிமுறைகளை தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இன்னும் உருவாக்கவில்லை. பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் தொடர்ந்து ஒன்றிய பாஜக ஆட்சியினால் கருத்து கேட்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் புறக்கணிக்கப்படுகின்றன. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மோடி அரசின் தன்னிச்சையான இந்தக் கொள்கையை முறியடிப்பது அவசியமாகும்.

ஆகவே, எதிர்வரும் டிசம்பர் 8, 2025 அன்று தொழிலாளர் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும், தொழிலாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டனக் குரலெழுப்பிட கேட்டுக் கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.