தமிழ் நாடு

சாம்சங்கிற்கு எதிராக மீண்டும் போராட்டம்… தொழிலாளர்கள் குண்டுக்கட்டாக கைது… பின்னணி என்ன?

Staff Writer

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வருகிறது சாம்சங் தொழிற்சாலை. இங்கு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் பணியில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு சிஐடியு தொழிற்சங்க அங்கீகாரம் மற்றும் பல்வேறு தொழிலாளர் நல கோரிக்கைகளை முன் வைத்து 40 நாட்களாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைக்கு பிறகு மீண்டும் தொழிற்சாலைக்கு பணிக்கு திரும்பினர்.

இதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் 27 பேர் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 6 மாத காலமாகியும் தற்போது வரை அந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்கவில்லை. தொழிற்சாலை நிர்வாகம் வேண்டுமென்றே தொழிலாளர் விரோதப் போக்கை கடைப்பிடிப்பதாக சிஐடியு குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில், தொழிற்சாலை நிர்வாகத்தின் செயல்களைக் கண்டித்து, சுங்குவார்சத்திரத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, மூன்று நாள் நடை பயணம் மேற்கொள்ள முடிவு செய்து அதற்கான அறிவிப்பை சிஐடியு வெளியிடப்பட்டது. இந்த நடை பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.

காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே 70 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஒருபுறம் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், சுங்குவார்சத்திரம் பகுதியில் சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார் தலைமையில், 70-க்கும் மேற்பட்டோர் நடை பயணத்தை தொடங்கினர். தடையை மீறி நடை பயணம் சென்ற ஊழியர்களை காவல்துறையினர், சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே தடுத்து நிறுத்தினர்.

காவல்துறையினர் தடுத்து நிறுத்திய முயன்ற போது இரு தரப்பிற்கு இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் சிஐடியு சங்கத்தினரை வலுகட்டாயமாக கைது செய்து தூக்கிச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.