முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய சிதம்பரம் 
தமிழ் நாடு

புதுச்சேரியில் இழுபறி: முதல்வர் ஸ்டாலினுடன் சிதம்பரம் சந்திப்பு!

Staff Writer

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் சென்னையில் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது புதுச்சேரி மாநில திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி.யும் உடன் இருந்தார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.

ஆனால், புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இழுபறி தொடர்ந்து நீடிக்கிறது. புதுச்சேரியில் கூட்டணிக்கு தாங்கள்தான் தலைமை வகிப்பதாகவும் திமுகவை விட ஒரு இடமாவது கூடுதலாக தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்கிறது காங்கிரஸ்.

ஆனால் திமுகவோ, திமுக- காங்கிரஸ் இரு கட்சிகளும் தலா 14 இடங்களை பங்கீட்டு கொள்ளலாம்; இதர 2 இடங்களை விடுதலை சிறுத்தைகள் மற்றும் சிபிஐக்கு கொடுக்கலாம் என்கிறது.

இது தொடர்பாக திமுக புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர் ஜெகதரட்சகன் எம்.பி, புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சஎ ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ஜெகத்ரட்சகன் எம்.பி.யும் உடன் இருந்தார்.

முன்னதாக தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த போது ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்தார். தற்போது புதுவை விவகாரத்திலும் ப.சிதம்பரம் களமிறங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.