அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது தவெக தலைவர் விஜய்யை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார்.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று காலை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தைச் சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கினார்.
செங்கோட்டையன் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை அமைச்சர் சேகர்பாபு சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, திமுகவில் சேருமாறு செங்கோட்டையனுக்கு சேகர்பாபு அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் செங்கோட்டையன் ‘பிடி கொடுக்காமல்’ பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவும் செங்கோட்டையனை திமுகவில் இணைய அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் செங்கோட்டையன். இந்த சந்திப்பின் போது தவெகவின் மாநில பொறுப்பாளர்களும் இருந்துள்ளனர்.
செங்கோட்டையன் நாளை தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாகச் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்துள்ளது.