காலை உணவுத் திட்டம் 
தமிழ் நாடு

காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம் சரியா?

Staff Writer

சட்டப்பேரவையில் இன்று துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. கொறடா எ.வ.வேலு, அரசு நலத்திட்டங்களின் பெயர் மாற்றம் குறித்து பேசினார்.

அப்போது, முதலமைச்சர் என்ற பொதுவான பெயரில் குறிப்பிடும் வகையில், தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலை உணவுத் திட்டத்திற்கு எதற்காக பெயர் மாற்ற வேண்டும் என்ற கேள்வியை எழுப்பினார்.

மேலும், பெருந்தலைவர் காமரசரின் பெயரை ஒரு திட்டத்திற்கு வைப்பதை நாங்கள் வரவேற்போம். ஆனால், அதற்கு புதிய திட்டத்தை உருவாக்கி வைக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பொதுவாக சூட்டப்பட்ட பெயரை ஏன் நீக்க வேண்டும் என்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு கேட்டார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்,

"அரசுத் திட்டங்களில் பெயர் மாற்றம் என்பது காலம் காலமாக நடைமுறையில் உள்ள ஒன்றுதான். கடந்த 1996-ல் கலைஞர் ஆட்சிக் காலத்தில் 'ஜெ.ஜெ. பிலிம் சிட்டி' என்பது 'எம்.ஜி.ஆர். திரைப்பட நகரம்' என மாற்றப்பட்டது.

மேலும் 'அம்மா பசுமை வீடு' திட்டம்' 'கலைஞர் கனவு இல்லம்' என்றும், 'அம்மா மருந்தகம்', 'அம்மா மினி கிளினிக்' ஆகியவை 'முதல்வர் மருந்தகம்', 'முதல்வர் கிளினிக்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கண் திறந்த பெருந்தலைவரின் பெயரிலேயே 'காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றப்பட்டு, ரூ. 203.72 கோடி செலவில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் இத்தகைய மாற்றங்கள் இயல்பானவை." என்று அமைச்சர் ராஜ்மோகன் விளக்கினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram