தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசிவிட்டு தான் ராகுல் காந்தி தவெக தலைவர் விஜய்யிடம் பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.
கரூரில் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலின் போது 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு, விஜய்யின் பிரச்சார வாகனத்தையும் பறிமுதல் செய்ய அறிவுறுத்தியது. ஆனாலும் தமிழக காவல்துறை இதுவரை விஜய் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்ய தயக்கம் காட்டி வருகிறது.
ஆனால் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் 8 நாள்களாக தலைமறைவாக உள்ளனர். இதனால் விஜய் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று திருமாவளவன் உள்ளிட்ட சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தவெக தலைவர் விஜய்யுடன் தொலைபேசி வாயிலாக பேசி இருக்கிறார். ராகுல் காந்தியின் தலையீடு காரணமாக விஜய் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு அமைதி காக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் ராகுல் காந்தி - விஜய் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக செல்வப்பெருந்தகை கூறியதாவது: இதில் எந்த அரசியலும் கிடையாது. இதில் அரசியல் பேசவில்லை. இப்படியான துயரச் சம்பவத்தின் போது ராகுல் காந்தி கட்சி, மாநிலம் பார்ப்பதே கிடையாது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பேசிவிட்டு தான் விஜய்யுடன் ராகுல் காந்தி பேசினார். விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்வதெல்லாம் தவறான கருத்து. பாஜக ஆளும் முதலமைச்சர்களிடம் கூட ராகுல் காந்தி விசாரிக்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் இந்த நிகழ்வை ராகுல் காந்தி பார்க்கிறார். விஜய்யிடம் அரசியல் ரீதியாக பேசவில்லை என்றும் கூறினார்.