ஜானகி நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. 
தமிழ் நாடு

‘அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை’ – ஜானகி நூற்றாண்டு விழாவில் ரஜினி பேச்சு!

Staff Writer

‘அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை. அது கிடைப்பதற்கு ஜானகி மிகப்பெரும் தியாகம் செய்தார்' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை வானகரத்தில் அதிமுக சார்பில் நடந்த ஜானகி நுாற்றாண்டு விழாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். அந்த வீடியோவில் ரஜினி கூறியதாவது: தமிழகத்தில் முதல் பெண் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுள்ள அனைவரும் வணக்கம். ராமாபுரம் எம்ஜிஆர் ஜானகி வீட்டில் எப்பொழுது போனாலும் உணவு இருக்கும். ஒரு நாளைக்கு 200 முதல் 300 பேர் வரை சர்வசாதாரணமாக உணவு உண்டு செல்வர். ஜானகியை 3 முறை சந்தித்து பேசி உள்ளேன். அன்பாக பழக கூடியவர்.

எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு, இக்கட்டான சூழல் காரணமாக ஜானகி அரசியலுக்கு வந்தார். அரசியல் எனக்கு ஒத்துவராது என்று கூறி ஜெயலலிதாவிடம் இரட்டை இலையை ஒப்படைத்தார். அவர் கட்சி நலன், மக்கள் நலன் கருதி அரசியலில் இருந்து விலகி ஜெயலலிதாவிடம் பொறுப்பை கொடுத்தார்.

எம்.ஜி.ஆருக்காக திரை வாழ்க்கையை தியாகம் செய்து கடைசி வரை அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஜானகி. அதிமுக வின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை. அது கிடைப்பதற்கு ஜானகி மிகப்பெரும் தியாகம் செய்தார்.

'நான் அரசியலுக்கு வருகிறேன்' என்று சொன்னபோது நிறைய பேரை சந்தித்தேன். நிறைய பேர் ஆலோசனை சொல்ல வந்தனர். அந்த ஆலோசனைகளை எல்லாம் கேட்டால், அவ்வளவு தான். நிம்மதி உட்பட எல்லாத்தையும் இழந்து விடுவோம். தெரிஞ்சு சொல்றாங்களா, தெரியாம சொல்றாங்களா தெரியாது.

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வார். ஏதாவது ஒரு முடிவு எடுக்கும்போது உனக்கு மட்டும் சந்தோஷம் தருமா, அதனால் மற்றவர்களுக்கும் சந்தோஷம் கொடுக்குமா என்று சிந்தித்துப்பார். உனக்கு மட்டும் தான் என்றால் அந்த முடிவு எடுக்க வேண்டாம். மற்றவர்களுக்கும் சந்தோஷம், திருப்தி என்றால் அந்த முடிவை எடு என்று சொல்வார்.அந்த மாதிரி ஜானகி, யார் ஆலோசனையும் கேட்காமல் அவரே முடிவு எடுத்து, 'இந்த அரசியல் எனக்கு சரிப்பட்டு வராது. உங்களிடம் தான் திறமை இருக்கிறது. தைரியம் பக்குவம் இருக்கிறது. உன்னால் தான் முடியும்' என்று கூறி ஜெயலலிதாவிடம் இரட்டை இலையை ஒப்படைக்க முடிவு எடுத்தார். அந்த குணம் பாராட்டத்தக்கது.” இவ்வாறு ரஜினி கூறினார்.