முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திருச்சி சிவா வேட்புமனு தாக்கல் 
தமிழ் நாடு

மாநிலங்களவை தேர்தல்: திமுக அணியின் 4 பேர் மனு தாக்கல்!

Staff Writer

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்), சுதீஷ் (தேமுதிக) ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகிய 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும்.

சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

கிறிஸ்டோபர் திலக் மனு தாக்கல்

இதில் திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டான்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டணி கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சாந்தியிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த நான்கு வேட்பாளர்களும் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.