மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் மனுவை இன்று (பிப்ரவரி 20) சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் தனித்தனியாக இயங்கி வருகின்றனர். இதற்கிடையே, தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாம்பழம் சின்னம் குறித்த அதிகாரப்பூர்வ கடிதத்தை தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவரிக்கு அனுப்பியது. இதைத் தொடர்ந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் புதிதாக மேலும் இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்தார்.
இந்த 2 வழக்குகளும் இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஏற்கனவே சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துவிட்டு அதே கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏன் மனு தாக்கல் செய்தீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை இதுபோல் வீணடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர். மேலும், இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ஏற்கனவே தேர்தல் ஆணையம், பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று உரிய விளக்கத்தைக் கொடுத்துவிட்டது. அதைச் சுட்டிக்காட்டி, ராமதாஸ் தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், இது தொடர்பான விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.