அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் 3 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அன்புமணியை கட்சியிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் பொறுப்பை மீண்டும் ராமதாஸ் ஏற்றுக்கொள்வார் என கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அன்புமணி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக-தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அன்புமணி தரப்பு இணைந்துள்ளது. அதிமுகவுடன் அன்புமணி நடத்திய பேச்சுவார்த்தை நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சட்டவிரோதம் என்று ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக, அன்புமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமதாஸ் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் 3 பேரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளதாக ராமதாஸ் தரப்பு இன்று (ஜனவரி 12) அறிவித்துள்ளது. சிவக்குமார் (மயிலம் தொகுதி), சதாசிவம் (மேட்டூர் தொகுதி), வெங்கடேசன் (தர்மபுரி தொகுதி) ஆகியோரை பாமகவில் இருந்து நீக்கியதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை பாமகவில் தொடரும் பிளவை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம், நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் கட்சி விதிகளை முன்வைத்து இரு தரப்பும் தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தி வருகின்றனர். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு மற்றும் சின்னம் தொடர்பான சிக்கல்கள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.