பாமக நிறுவனர் ராமதாஸ் 
தமிழ் நாடு

‘அய்யா பாமக’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கும் ராமதாஸ்!

Staff Writer

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ராமதாஸ் தரப்பு 'அய்யா பாமக' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்துள்ளது. இந்த கட்சி பெயரின் விரிவாக்கம் மற்றும் கட்சியின் தலைவர் யார்? என்பது பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் உள்ளது. இருவரும் தனித்தனி அணியாக உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில் அன்புமணி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளார். அவருக்கு 18 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

ராமதாஸ், சசிகலாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதற்கிடையே தான் கட்சி, சின்னம் யாருக்கு? என்பதில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் உள்ளது.

தற்போதைய சூழலில் கட்சியின் சின்னம், பெயர் உள்ளிட்டவை அன்புமணிக்கு தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் ராமதாஸை விட அன்புமணியின் கை தான் ஓங்கி உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் அன்புமணி ராமதாஸ்க்கு தான் பாமகவின் பெயரை பயன்படுத்தவும், மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படவும் அதிக வாய்ப்புள்ளது.

இதனை எதிர்த்து ராமதாஸ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்து வருகிறார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தான் வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ராமதாஸ் தரப்பு புதிய கட்சியை தொடங்கி உள்ளது. அந்த கட்சியின் பெயரை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராமதாஸ் தரப்பு தொடங்கிய உள்ள கட்சியின் பெயர் 'அய்யா பாசறை மக்கள் கட்சி'. இதன் சுருக்கம் 'அய்யா பாமக' என்பதாகும். இந்த கட்சியை பாமகவின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் மகன் முகிலன் பெயரில் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.