“என் மகன் அன்புமணி என்னை 20, 30 துண்டுகளாக வெட்டி வீசியிருந்தாலும் பரவாயில்லை.” என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
சேலத்தில் நடந்த பாமக பொதுக் குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: “எனக்குள் உள்ள ஆதங்கத்தை உங்களிடம் கொட்டித்தீர்க்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், அதற்கான நேரம் இது அல்ல. தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டையும் பெறுவோம்.
ஒரு கும்பல், நான் பொறுப்புக்கொடுத்த பிள்ளைகள் என்னை தூற்றுகிறார்கள். கெளரத்தலைவரையும் தூற்றுக்கிறார்கள். இப்போதெல்லாம் எனக்கு சரியாக தூக்கம் வருவதில்லை. ஒருநாள் தூங்கிக் கொண்டிருந்தபோது, என்னுடைய கனவில் என்னுடைய அம்மா வந்தார். "ஏம்ப்ப அழுகுறே"னு கேட்டாங்க. அதற்கு நான் உன் பேரன் (அன்புமணி) என் கழுத்தில் துணியை போட்டு இறுக்கி கொல்ல வேண்டும் என ஒருவன் பதிவு போடுகிறார், அவரை அழைத்து பதவி கொடுக்கிறான் என்றேன். அப்போது என் தாய் "உன் மகனை நீ சரியாக வளர்க்கவில்லை" என என்னை கண்டித்தார். அப்போதுநானும் "ஆமாம்மா, நான் சரியாக வளர்க்கவில்லை. என் முதுகிலும் மார்பிலும் கண்டபடி குத்துகிறான்." என்றேன்.
ஒரு ஆண்டுக்கு முன்னர், சென்னையில் சொத்து தகராறால் தந்தையை 20, 30 துண்டுகளாக வெட்டியதை செய்தியில் படித்திருப்பீர்கள். அது போல் என்னையும் அன்புமணி வெட்டியிருந்தால் நான் போய் சேர்ந்திருப்பேன். ஆனால், ஒவ்வொரு நாளும் சில்லறை பசங்களை வைத்துக் கொண்டு என்னை அன்புமணி தூற்றுகிறார், அவமானப்படுத்துகிறார். ஒவ்வொரு நாளும் தனது ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு அன்புமணி தினம் தினம் என்னை கேவலப்படுத்துகிறார். அவர்களையும் நான்தான் வளர்த்துவிட்டேன். அது என் தவறுதான்!
நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்? அவரை மான்ட்போர்ட்டில் படிக்க வைத்தேன். எம்பிபிஎஸ் படிக்க வைத்தேன். மத்திய அமைச்சராக்கினேன். மாநிலங்களவை எம்பியாக்கினேன்.
என்னை போன்ற ஒரு தகப்பன் அவருக்கு கிடைப்பாரா, நான் அவ்வளவு செய்திருக்கிறேன். எனது மருத்துவர்கள் கூட "ஏன் அன்புமணி இப்படி செய்கிறார்? இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகள் (ராமதாஸுக்கு வயதாகிவிட்டதால் 5, 6 வருடங்கள் கழித்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அர்த்தத்தில் அவர்கள் கேட்டனர்) பொறுமையாக இருக்கக் கூடாதா? ஒரு நிர்வாகி மருத்துவரிடம் சென்ற போது அவரிடம் ஒரு சீனியர் மருத்துவர், ஐயாவுக்கு எத்தனை மகன்கள் என கேட்டாராம். அதற்கு அவர் ஒரே ஒரு மகன்தான் என்றாராம். அதற்கு அந்த டாக்டர், ஏன் இப்படி ஐயாவை பாடாய்படுத்துகிறார் என கேட்டாராம். இப்படி எல்லாரும் அன்புமணியை பொறுமையாக இருக்கக் கூடாதா என்றுதான் கேட்கிறார்கள்.
நான் நினைத்திருந்தால் பெரிய பதவிகளை வகித்திருப்பேன். ஆனால் நான் அதை செய்யவில்லை. நான் எந்த பதவியும் வகிக்க மாட்டேன் என செய்த சத்தியத்தை இன்று வரை காப்பாற்றி வருகிறேன். அன்புமணிக்கு காலம் பதில் சொல்லும், அன்புமணியை நினைத்தால் தூக்க மாத்திரை போட்டால் கூட தூக்கம் வரவில்லை.
ஆனால் மக்களையும் பாட்டாளி சொந்தங்களையும் நினைக்கும் போது எனக்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அன்புமணியின் பின்னால் 5 சதவீதம் பேர் கூட இல்லை. ஆனால் என் பின்னால் 95 சதவீதம் சொந்தங்கள் உள்ளார்கள். எனவே அன்புமணி நினைப்பது நடக்காது. வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அன்புமணிக்கு உரிய பாடம் புகட்டுவோம். அவர் இனியும் மாற மாட்டார். அவருக்கு காலம்தான் பதில் சொல்லும்.
நான் சிலரிடம் நேருக்கு நேர் ஆலோசனை நடத்தியுள்ளேன். அப்போது அவர்களிடம் யாருடன் கூட்டணி வைப்பது என கேட்டிருந்தேன். அவர்கள் கூறிய பதிலை வைத்து நான் முடிவு செய்துள்ளேன். எனவே நாம் அமைக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும். எல்லாரும் பத்திரமாக வீடு போய் சேருங்கள்.” என்றார்.