பெ.சண்முகம், சிபிஐஎம் மாநிலச் செயலாளர் 
தமிழ் நாடு

‘வரலாறை படியுங்கள் மிஸ்டர் விஜய்...!’

Staff Writer

''மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய்'' என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ”தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை' என்பதை ஏதோ அவர் மிகப்பெரிய தியாகம் செய்வதைப் போல ஊடகங்களும் அதை பெரிது படுத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பல்லாண்டு காலம் முதல்வராக இருந்த இ.எம்.எஸ், ஜோதி பாசு, நிரூபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், இ.கே. நாயனார், மாணிக் சர்க்கார், புத்ததேவ் பட்டாச்சாரியா, வி.எஸ் அச்சுதானந்தன் இவர்கள் அனைவரும் அரசியலில் 60, 70 ஆண்டு காலத்திற்கு மேலாக மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.

பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள். அது மட்டுமல்லாமல் இ.எம்.எஸ், பி.சுந்தரைய்யா, ஹர்கிசன்சிங் சுர்ஜித் இவர்கள் அனைவரும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக சிறப்பாக செயல்பட்டவர்கள். தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர்கள் மட்டுமல்ல, அடிப்படைக் கட்சி உறுப்பினர்கள் கூட தங்களுடைய சொத்துக்களை மக்கள் பயன்பாட்டுக்காக கட்சிக்கு கொடுத்திருக்கிறார்கள்.

உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்வது தான் கம்யூனிஸ்களின் அரசியல். பணம் சம்பாதிக்காமல் இருப்பதல்ல. வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய். அதிலும் மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.” இவ்வாறு சண்முகம் கூறியுள்ளார்.