நிருபர் தாமோதரன் பிரகாஷ் 
தமிழ் நாடு

சவுக்கு மாலதி புகார்- நிருபர் தாமோதரன் பிரகாஷ் கைது

Staff Writer

அரசியல் யூட்டியூபர் மாலதி அளித்த புகாரின்படி பிரபல பத்திரிகையின் மூத்த செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:

“ சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மாலதி(38) என்பவர் தனி நபர் நடத்தி வரும் 'சவுக்கு மீடியா' என்ற யூட்டியூப் சேனலில் தொகுப்பாளினியாகப் பணி செய்து வருவதாகவும்,

பத்திரிகை நிருபர் தாமோதரன் பிரகாஷ் என்பவர் பெயர் தெரியாத ஒரு நெறியாளருடன் சேர்ந்து, 'எச்ஐவி சவுக்கு மாலதியும் கல்யாணம்' என்ற தலைப்பில், மாலதியை பற்றி அவதூறாகவும், அவருக்கு எச்ஐவி உள்ளது என்றும்,

மாலதியின் புகைப்படத்தைக் காண்பித்து, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொய்யாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோ பதிவிட்டு,

கடந்த ஜனவரி மாதம் 'கிங் 24 X 7' எனும் யூட்டியூப் சேனலில் வெளியிட்டு,

பெண்மைக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டுள்ளதால், மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாலதி என்பவர் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின்பேரில், சென்னை, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், தகவல் தொழில் நுட்பச் சட்டம், தமிழ்நாடு பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய தாமோதரன் பிரகாசை (58) இன்று (16.09.2026) கைது செய்து, தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.