முதல்வர் விஜய் 
தமிழ் நாடு

தொகுதி மறுவரையறை - முதல்வர் விஜய் தீர்மானத்தின் 3 அம்சங்கள்!

Staff Writer

சட்டப்பேரவை இன்று காலையில் தொடங்கியதும், முதலில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டுவந்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசியதாவது :

“ ஒன்றிய அரசு, பெண்களுக்கென மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்கி, 106ஆவது சட்டத்திருத்தத்தை 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நிறைவேற்றி, நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி நடைமுறைக்குக் கொண்டுவருவதாக அறிவித்தது.

இருப்பினும், அது முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை.

நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம், 131ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவையும், தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவையும் தாக்கல் செய்தது. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.

மகளிருக்கான தொகுதி ஒதுக்கீட்டை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறையுடன் இணைத்து அதை ஒத்திவைக்கக்கூடாது.

மகளிருக்கான தொகுதி ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானம் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 6 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை காரணமாக தென்மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து ஒரு தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்புச் சட்டத்தை நிறைவேற்றினால், மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு உட்பட்ட தென் மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவ அநீதி ஏற்படும். எனவே, 543 என்ற மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும்.

தீர்மான விவரம்

1) நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.

2) தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே விகிதாச்சார பிரதிநிதித்துவம் அடிப்படையில் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.

3) வரவிருக்கும் மக்களவை, சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டை பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தத் தீர்மானம் ஒரு அரசியல் கட்சியின் தீர்மானம் அல்ல; தமிழ்நாட்டின் உரிமையை நிரந்தரமாக பாதுகாக்கும் தீர்மானம். ஆகவே அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பேரவை உறுப்பினர்களும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்.” என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram