எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

ஜல்லிக்கட்டு காளை முட்டி உயிரிழந்தால் ரூ.10 லட்சம் - இபிஎஸ் அறிவிப்பு!

Staff Writer

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் முட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று வாக்குறுதியாக அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட சாலப்பாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;

"அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் ஜல்லிக்கட்டு போட்டியின் போது யதேச்சையாக உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு, பதிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு அரசே இன்சூரன்ஸ் செய்து கொடுக்கும். காளைகளின் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அரசே இன்சூரன்ஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.”இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கல் பண்டிகையின் போது மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் கண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிக காளைகளை அடக்கிய சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.