மெட்ரோ 
தமிழ் நாடு

கிளாம்பாக்கம் மெட்ரோ- ஆர்டிஐ தகவலால் அதிர்ச்சி!

Staff Writer

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) சமர்ப்பிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகியும், மத்திய அரசு இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி உறுதியாகியுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

நீளம்: 15.46 கி.மீ.

செலவு: சுமார் ₹9,335 கோடி 

நிலையங்கள்: 13 உயர்மட்ட (Elevated) இரயில் நிலையங்கள்

தற்போதைய நிலையில், தமிழ்நாடு அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கை இன்னும் மத்திய வீட்டுவசதி- நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் முதற்கட்ட ஆய்விலேயே உள்ளது என்பது தெரியவருகிறது.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இந்த தாமதம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா மெட்ரோவுக்கு 4 மாதங்களிலும், குஜராத் மாநிலம் அகமதாபாத் மெட்ரோவுக்கு 7 மாதங்களிலும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரத்தில், அன்றாடம் சுமார் 15 இலட்சம் பயணிகள் பயன்பெறக்கூடிய இந்தத் திட்டம் நீண்டகாலமாக நிலுவையில் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அரசு இதற்கான நிதியை ஒதுக்கித் தயார் நிலையில் இருந்தாலும், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே பணிகளைத் தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.