தாம்பரத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பில், நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தாம்பரம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மதுரவாயல் பைபாஸில் அமையவுள்ள இந்த பிரம்மாண்ட அரங்கத்திற்கு 9 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கால்பந்து, டென்னிஸ், பூப்பந்து, கைப்பந்து, பிக்கிள்பால் ஆகியவற்றுக்கான மைதானங்கள், தடகளப் போட்டிக்கான அரங்கம், நவீன நீச்சல் குளம், பனிச்சறுக்குத் தடம், உடற்பயிற்சிக் கூடம், சிறுவர் விளையாட்டுப் பகுதி, அழகுபடுத்தப்பட்ட நடைபாதைகள் ஆகியவை அமையவுள்ளது. இந்த அரங்கம் 4,000 பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் ஏற்படுத்தப்பட உள்ளதால், மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்த சிறந்த அரங்கமாக இது அமையும்.
உள்ளூர் மக்களிடையே விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றை ஊக்குவிக்கவும், சிறு வயதிலிருந்தே விளையாட்டு வீரர்கள் திறம்பட பயிற்சி பெறவும் இந்த அரங்கம் உதவிபுரியும் என்று மாநகராட்சி ஆணையர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சியில் ஏற்கனவே 15 பூப்பந்து, 13 பிக்கிள்பால் மைதானங்கள் இருந்தபோதிலும், இந்த மாபெரும் அரங்கத்தை அமைப்பதற்கான முதன்மை நோக்கம் கல்வி, விளையாட்டை மேம்படுத்துவதே என்று மாநகராட்சி ஆணையர் எஸ். பாலச்சந்தர் கூறினார்.